கிராம பஞ்சாயத்தார் கொலைமிரட்டல் சீனியர் எஸ்பியிடம் பெண் பரபரப்பு புகார்

காரைக்கால், நவ. 28: தொடர்ந்து கொலைமிரட்டல் விடும் இரு கிராம பஞ்சாயத்தார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்தோடு உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என பாதிக்கப்பட்ட பெண் சீனியர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காரைக்கால்மேடு பகுதியை சேர்ந்த திலகவதி என்ற பெண், தனக்கும் தனது மகளுக்கும் கொலைமிரட்டல் விடுத்த கிராம பஞ்சாயத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று அவர் காரைக்கால் மாவட்ட சீனியர் எஸ்பி அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நான் காரைக்கால்மேடு சுனாமி குடியிருப்பில் வசித்து வருகிறேன். எனது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். எனக்கு 2 பெண்கள். எனது மகள் அமுதாவை கிளிஞ்சல்மேட்டைச்சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு  கடந்த 2006ம் ஆண்டில் 58 பவுன் தங்கநகை, பைக் மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் முறைப்படி திருமணம் செய்துவைத்தேன்.

ஆனால், சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மகளை ஏமாற்றி நகைகளை பிடுங்கிகொண்டு கொடுமை செய்ததோடு, 2வது திருமணமும் செய்துகொண்டார். இதுகுறித்து, காரைக்கால் நகர காவல் நிலையத்திலும்

புகார் அளித்தேன். போலீசார் புகாரை வாங்க மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதனால் கிராம கட்டுப்பாட்டை மீறியதாக காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு ஆகிய இரு கிராம பஞ்சாயத்தாரும் என்னை மிரட்டி, ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் அபராதத்தொகையை பிடுங்கிகொண்டு, என் குடும்பத்தை கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்துவிட்டனர். உயர்நீதிமன்றம் என் மகளுக்கு விவாவகரத்துடன், திருமண சீர்வரிசையை என்னிடம் திருப்பி ஒப்படைக்க தீர்ப்பளித்தது. ஆனால், இதுநாள் வரை அதை யாரும் திருப்பி தரவில்லை. இதையடுத்து காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நீதிமன்ற தீர்ப்பை காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டினேன். இதனால் ஆத்திரமடைந்த இரு கிராம பஞ்சாயத்தாரும் என்னை தொழில் செய்யவிடாமல் தடுப்பதோடு, என்னை குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாக தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். எனவே, மேற்கண்ட நபர்களிடமிருந்து என் குடும்பத்தை பாதுகாத்து, நீதிமன்ற உத்தரவுப்படி திருமண சீர்வரிசை மற்றும் என்னிடமிருந்து பிடுங்கிய ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மீட்டுதரவேண்டும். இல்லையேல், வரும் டிசம்பர் 5ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்தோடு உண்ணாவிரதபோராட்டம் நடத்துவேன். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: