மஞ்சளாறு தண்ணீர் கோரி மறியல் வத்தலக்குண்டு அருகே பரபரப்பு

வத்தலக்குண்டு, நவ. 27: மஞ்சளாறு அணை தண்ணீர் கோரி வத்தலக்குண்டு அருகே விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலக்குண்டு அருகே கரட்டுப்பட்டி, உச்சப்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டுவின் பழைய ஆயக்கட்டு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதற்கும் தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணை கட்டப்பட்டது. ஆனால் காலப்போக்கில் புதிய ஆயக்கட்டு உருவாக்கப்பட்டு தேவதானப்பட்டி, பெரியகுளம் பகுதிக்கும் மஞ்சளாறு அணை தண்ணீர் வழங்கப்படுகிறது.

தற்போது கஜா புயல் காரணமாக 57 அடி கொள்ளளவு கொண்ட மஞ்சளாறு அணை முழுமையாக நிரம்பியுள்ளது. அணையில் இருந்து குறைந்தளவு, முறையாக திறந்து விடப்படாததால் வத்தலக்குண்டு பகுதிக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர், விவசாயத்திற்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கண்டித்து தமிழக விவசாயிகள் கூட்டமைப்பினர் அதன் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில் சுமார் 1000 பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் திறந்து விடுவதாக உறுதியளித்தனர். அதன்பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் இதுவரை தண்ணீர் வந்துசேரவில்லை. இதனால் கொதிப்படைந்த தமிழக விவசாயிகள் கூட்டமைப்பினர் சில நாட்களுக்கு முன்பு அவசர கூட்டம் நடத்தி நவ.26ல் நீதிகேட்கும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று வத்தலக்குண்டு- உசிலம்பட்டி சாலை உச்சப்பட்டியில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக 200 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் நிலக்கோட்டை டிஎஸ்பி பாலகுமரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து பேசுவாக உறுதியளித்தனர்.

ஆனால் அதிகாரிகள் ஒரு மணிநேரமாகியும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பொதுமக்கள் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து 10 நாட்களுக்குள் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்குவதாக உறுதியளித்தனர். அதன்பிறகே மறியலை கைவிட்டு அனைவரும் கலந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தண்ணீர்வராவிட்டால் இடைத்தேர்தல் புறக்கணிப்பு விவசாயிகள் கூறுகையில், ‘‘சொன்னது போல 10 நாட்களுக்குள் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வராவிட்டால் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு அடுத்தகட்டமாக கலந்து ஆலோசித்து பெரியளவில் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.

Related Stories: