மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை அசுர வேகத்தில் பறக்கும் கேப், பஸ்களால் விபத்துக்கள் அதிகரிப்பு

* தினமும் பலர் காயமடைந்து செல்லும் அவலம்

* விதிகளை மீறி வாகனங்கள் இயக்கம்

* ஐ.டி நிறுவன டிரைவர்கள் அடாவடி

துரைப்பாக்கம்: சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அடையாறு மத்திய கைலாஷ் முதல் துவங்கி சிறுசேரி வரையில் விதிமுறைகளை மீறி அசுர வேகத்தில் இயக்கப்படும் ஐடி நிறுவன கேப்கள், பஸ், வேன்களால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்கி காயமடைந்து செல்லும் அவலநிலை உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி சாலை அடையாறு மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை சுமார் 25 கி.மீ தூரம் கொண்டது. இந்த சாலையில் ஐடி நிறுவனங்கள், தனியார் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த சாலையில் ஐடி நிறுவனங்களுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் அதிக வேகத்தில் செல்கின்றன. இப்பேருந்துகளின் டிரைவர்கள் தாறுமாறாக ஓட்டுவதால் பைக் மற்றும் கார்களில் செல்வோர் இந்த பேருந்துகளை கண்டவுடன், வாகனங்களை சாலையோரம் ஒதுங்கிவிட்டு, இந்த பேருந்துகள் சென்றவுடன் தங்களது வாகனங்களை பின் தொடர்ந்து செல்கின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் ஐடி நிறுவனங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அந்தந்த நிறுவன வாசலிலேயே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி ஐடி ஊழியர்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நாளுக்குநாள் பெருகி வருகிறது.

மேலும் பேருந்து, வேன், கார்களின் டிரைவர்கள் இரவு நேரங்களில் மது அருந்துவிட்டு, போட்டிப்போட்டு தங்களது வாகனங்களை இயக்குவதோடு இடைவெளி இன்றி சென்று, மற்ற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் இயக்குகின்றனர். பொதுவாகவே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இப்பகுதி சுங்கச்சாவடி அருகே நின்று அவ்வழியாக வரும் பைக்கை மடக்கி, மது அருந்தி உள்ளார்களா? வாகனங்களின் ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சோதனை செய்கின்றனர். அப்படி சோதனை செய்யும்போது, மது அருந்தி இருந்தாலோ, உரிய ஆவணங்கள் இன்றி இருந்தாலோ அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்துகின்றனர். ஆனால் மது அருந்திவிட்டு ஐடி நிறுவனங்களில் இயக்கப்படும் பேருந்து, வேன், கார்களின் டிரைவர்களை சோதனை செய்வது கிடையாது.குறிப்பாக, ஐடி நிறுவனங்களுக்கு இயக்கப்படுகிற பெரும்பாலான கார்கள் ஆங்காங்கே நசுங்கி உள்ளது. இதற்கு காரணம், இந்த வாகனங்கள் பல இடங்களிலும் விபத்து ஏற்படுத்தியதுதான். மேலும் பெரும்பாலான டிரைவர்கள் செல்போனில் பேசிக்கொண்டு செல்கின்றனர்.

ஒரு சில ஐடி நிறுவனங்களில் கேப்கள் வெளியே செல்லும்போது உள்ளே வரும்போது, டிரைவர் மதுஅருந்தி உள்ளாரா என கருவி மூலம் சோதனை செய்கின்றனர். ஆனால், பெரும்பாலான கம்பெனிகள் சோதனை செய்வதில்லை. மேலும், கேப்கள் அசுர வேகத்தில் இயக்கினால், புகார் அளிக்கலாம் என கூறி ஒரு நம்பரை அந்தந்த வாகனங்களின் பின்னால் ஓட்டி இருப்பார்கள். இப்போது, அந்த ஸ்டிக்கர்கள் எல்லாம் மாயமாகிவிட்டது. இதேபோல்தான், ராஜிவ்காந்தி சாலையில் உள்ள தனியார் கல்லூரி பஸ் டிரைவர்களும் அடாவடியில் ஈடுபடுகின்றனர். சிறிய அளவு இடைவெளி கூட இல்லாமல் போட்டிப்போட்டு கொண்டு பஸ்சை இயக்குகின்றனர். இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி பஸ்சில் பயணிக்கும் மாணவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

கி.மீ கணக்கில் கொட்டும் துட்டு

ஐ.டி நிறுவனங்களுக்காக இயக்கப்படுகின்ற வேன் மற்றும் கார்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இவர்களுக்கு ஒரு கிமீ தூரத்துக்கு இவ்வளவு ரூபாய் என்ற விகிதத்தில் தொகை பட்டுவாடா செய்யப்படுவதால் அதிக வேகத்தில் சென்று இறக்கி விட்டு மீண்டும் அடுத்த சுற்றுக்காக அதிவேகத்தில் பறந்து வருகின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

வேக கட்டுப்பாட்டு கருவிகள் அகற்றம்

மஞ்சள் போர்டு வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது வாகனங்களை பழுது பார்த்து அந்தந்த ஆர்டிஓ அலுவலகங்களுக்கு சென்று தகுதி சான்று பெற வேண்டும் என்ற விதி உள்ளது. இவ்வாறு தகுதி சான்று பெறும்போது வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தி இருக்க வேண்டும். அப்படி பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே, தகுதி சான்று பெற முடியும். எனவே, தகுதி சான்றை பெறும் வாகனங்களின் டிரைவர்கள் வேக கட்டுப்பாட்டு கருவியை அகற்றிவிட்டு வாகனங்களை ஓட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கமிஷனருக்கு வேண்டுகோள்

பொதுமக்கள், வாகனஓட்டிகள் கூறுகையில், ‘‘சென்னை நகரை இணைக்கும் முக்கியமான சாலை ராஜிவ்காந்தி சாலை. இங்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறி அசுர வேகத்தில் பறக்கும் ஐடி நிறுவன வாகனங்கள் மற்றும் தனியார் கல்லூரி பஸ்களால் தினமும் விபத்து ஏற்படுகிறது. இவர்களை போக்குவரத்து போலீசாரும், ஆர்டிஓ அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. பண்டிகை காலங்களில் நெரிசலை குறைக்கும் வகையில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தி போக்குவரத்தை சரி செய்யும் அதிகாரிகள், அதுபோன்று சம்பந்தப்பட்ட ஐடி நிறுவன டிரைவர்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். மேலும், இரவில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி அவர்களை கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் டிரைவர்கள் மீது போலீஸ் கமிஷனர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மருத்துவமனையும் இல்லை... புலனாய்வு அலுவலகமும் இல்லை..

சென்னை அடையாறு மத்திய கைலாசிலிருந்து ராஜிவ்காந்தி சாலையானது கொட்டிவாக்கம் முதல் கேளம்பாக்கம் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த சாலையில் தினமும் விபத்துக்கள் நடைபெறுகின்றன. மாமல்லபுரத்தில் இருந்து திருப்போரூர் வரை செல்லும் சாலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது. அதேபோல், கேளம்பாக்கம் முதல் திருவான்மியூர் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்குள் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இந்த சாலை வழியாக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு காயமடைந்தவர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது.கடந்த சில மாதங்களாக ராஜிவ்காந்தி சாலையில் செம்மஞ்சேரி சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து விபத்து ஏற்பட்டு பல உயிர் பலியும் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையில் கந்தன் சாவடி முதல் செம்மஞ்சேரி வரை விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசாரும் கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் முதல் முட்டுக்காடு படகுதுறை வரை விபத்துக்கள் ஏற்பட்டால் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வந்துதான் சடலத்தை அகற்றிவிட்டு சாலையை சீரமைக்க வேண்டும். சம்பவ இடத்துக்கு போக்குவரத்து போலீசார் செல்வதற்கே சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகும்.

இதனால், உயிருக்கு போராடுபவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கவும் இறந்தவர்களின் சடலத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கவும் தாமதமாகிறது. எனவே உயிருக்கு போராடுபவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கவும் இறந்தவர்களின் சடலத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கவும் சோழிங்க நல்லூரில் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: