மின்சாரம் இல்லாமல் 4 நாளாக அதிராம்பட்டினம் மக்கள் அவதி

தஞ்சை, நவ. 20:  கஜா புயல் கரையை கடந்து 5 நாட்களாகியும் மின்சாரம், குடிநீர் இல்லாததால் அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கஜாபுயல் தாக்கி நேற்றுடன் 4 நாட்களாகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை வரை பல இடங்களில் மின்  இணைப்பு கொடுக்கவில்லை. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் இன்னும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. மின்சாரம் இல்லாததால் எந்த ஒரு பணியும் செய்ய முடியாத நிலை உள்ளது.   குறிப்பாக குடிநீர் வழங்க முடியவில்லை.

லிட்டர் பால் ரூ.50 :மின்சாரம இல்லாததால் பால் வாங்கி வீடுகளில், கடைகளில்  இருப்பு வைத்து விற்க முடியவில்லை. மேற்கண்ட பகுதிகளில் இன்னும் கடைகள்  திறக்கப்படவில்லை.  குறிப்பாக பெட்டிக்கடைகள், டீக்கடைகள் கூட இல்லை. அதிராம்பட்டினம் பகுதியில்  வழக்கமாக வீடுகளுக்கு பால் கொடுப்பவர்கள்  வழக்கமாக 1 லிட்டர்  வாங்குபவர்களுக்கு அரை லிட்டர் என்ற அளவில் குறைவாகவே கொடுத்தார்.  லிட்டர்  35 ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் நேற்று ரூ.50 வரை விற்கப்பட்டது.

அதிராம்பட்டினம்  பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து  4 நாட்களுக்கு  பிறகு நேற்று காலை வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது. புயல்  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிலர் ஜெனரேட்டர்களை கொண்டு வந்து அதன் மூலம்  வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை இயக்குகிறார்கள். இதற்கு 15  நிமிடத்திற்கு ரூ,500 கட்டணம் வசூலிக்கின்றனர்.அதிராம்பட்டினம் பகுதிகளில் சில கடைகள் சேதடையாமல் இருந்தபோதிலும் அவற்றை  திறந்து வியாபாரம் செய்ய வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் ஆங்காங்கே  குடிநீர், உணவின்றி தவித்து வரும் நிலையில் கடையில் புகுந்து  விடுவார்களோ என்று வியாபாரிகள் கருதுகின்றனர். குடிநீர் வசதி இல்லாததால்  ஆங்காங்கே உள்ள கிணறு, குளத்தில் தண்ணீர் எடுத்து குடிக்கின்றனர்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 2,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.  இடிந்து கிடக்கும் வீடுகளை அந்த மக்கள் சீரமைக்கவும் முன்வரவில்லை.  வீடுகளை சீரமைத்துவிட்டால் அல்லது இடிபாடுகளை அப்புறப்படுத்தி விட்டால்  நமக்கு  நிவாரணம் கிடைக்காது என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர். இதற்கு காரணம்  இந்த பகுதிகளுக்கு இன்னும் அதிகாரிகள் சென்று அனைவருக்கும் நிவாரணம்  வழங்கப்படும் என்று உறுதி கூறினால் மக்களே மீட்பு பணிகளை ஓரளவு துவங்கி விடுவர்.

Related Stories: