மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் நிச்சயம்

புதுச்சேரி,  நவ. 20:  முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  நேற்று கொண்டாடப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவரும்,  பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இந்திராகாந்தியின் திருவுருவப்  படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள்  வழங்கப்பட்டது. அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான்,  எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி, பொதுச்செயலாளர் ஏகேடி  ஆறுமுகம், ஓபிசி பிரிவு கண்ணன், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாஷிங்கம், மாநில, மாவட்ட, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள்,  அனைத்து அணிகள், பிரிவுகளின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

முன்னதாக நமச்சிவாயம் தலைமையில் காங்கிரசார் தேசிய ஒருமைப்பாட்டு  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் நமச்சிவாயம் பேசுகையில், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக திட்டங்களை  கொண்டு வந்தவர் இந்திராகாந்தி. இந்தியாவில் தீவிரவாதத்தை முழுமையாக அழிக்க அயராது பாடுபட்டவர். எனவே அவரை மக்கள் மனதில் இருந்து யாராலும்  பிரிக்க முடியாது. ஆனால் இன்றைய மோடி அரசானது இந்திராகாந்தியின்  பிறந்தநாளைகூட அரசு விழாவாக நடத்த மனமில்லாமல் இருட்டடிப்பு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு நிம்மதியான ஒரு ஆட்சியை  தரக்கூடிய இயக்கம் என்று  சொன்னால் அது காங்கிரஸ் மட்டும்தான்.   முதல்வர் நாராயணசாமி தலைமையிலான இந்த அரசாங்கம் மக்களுக்கான  திட்டங்களை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டிருக்கிறது. பல இடையூறுகள், தடைகள் இருந்தாலும்  முனைப்புடன் அதை செயல்படுத்தி வருகிறது.காரைக்காலில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புதுவை  மாநிலத்தில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. புயலுக்கு பிறகும் அங்கு  மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர காங்கிரஸ் அரசு  ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடிய அமைச்சரவையானது  மக்களுக்கு தேவையான நிவாரணத்தை உடனடியாக வழங்குவது தொடர்பாக ஆலோசித்தது. மழையால் உண்மையாக பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உரிய நிவாரணத்தை முதல்வர் நிச்சயம் அறிவிப்பார்.  இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் தேவையில்லை. காரைக்காலில் சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்ய கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவையில் மீனவர்கள் ஒருவாரம் கடலுக்கு செல்ல  முடியாத காரணத்தால் அவர்களுக்கும் நிவாரணத்தை கொடுக்க வேண்டுமென அமைச்சரவை  முடிவெடுத்து அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளோம்.

 மத்திய உள்துறை அமைச்சரை முதல்வர், உடனடியாக  தொடர்பு கொண்டு எங்கள் பகுதிக்கு உடனே மத்திய ஆய்வுக்குழுவை அனுப்ப  வேண்டும், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  இதனை பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். புதுவை அரசு, கஜா புயல் சேதம் தொடர்பான  இடைக்கால அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்தது.அப்போது, மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக  நிதியை உடனே அறிவிக்க வேண்டுமென கேட்டுள்ளோம். அதுவும் மிக விரைவாக நமக்கு  கிடைக்க இருக்கிறது என்றார்.

Related Stories: