ஸ்பின்கோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, நவ. 20: திருபுவனையில் கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) உள்ளது. இங்கு 550க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த செப்டம்பர், அக்டோபர் மாத சம்பளமும், தீபாவளி போனசும் வழங்கப்படவில்லை. இதனை வழங்க கோரியும், தனியாருக்கு தாரை வார்க்காமல் மில்லை தொடர்ந்து இயக்க வலியுறுத்தியும் தொழிலாளர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். பின்னர், புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்பின்கோ கூட்டு ஒருங்கிணைப்பு குழு பொதுச்செயலாளர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். இதில் 11 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சங்க நிர்வாகிகள், ஸ்பின்கோ மேலாண் இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் போக்குவரத்து துறை துணை ஆணையர் சச்சிதானந்தத்தை சந்தித்து பேசினர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: