ஏடிஎம் மோசடி ஆசாமிகளை காவலில் விசாரிக்க நடவடிக்கை

புதுச்சேரி, நவ. 20: புதுவையில் தற்போது பிடிபட்டுள்ள ஏடிஎம் மோசடி ஆசாமிகளுக்கு மாஜி கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக விசாரிக்க 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

 புதுவை, சின்ன கரையாம்புத்தூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (42). இவர் கரையாம்புத்தூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளராக உள்ளார். இவருடைய வங்கிக் கணக்கில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ரூ.1.35 லட்சம் திடீரென மாயமானது. நள்ளிரவு நேரத்தில் ஏடிஎம்மில் இருந்து இப்பணம் எடுக்கப்பட்டது.

 இதுகுறித்து சாமுண்டீஸ்வரி சிபிசிஐடி போலீசாரிடம் முறையிட்டார். டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் டெல்லியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்தது. டெல்லி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஓட்டல் ஊழியரான கல்விநாதன் (29), ஜவுளிக்கடை உரிமையாளரான ககன்குமார் (32) இருவரையும் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து அதிரடி விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரையும்  மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதனிடையே இவர்கள் இருவருக்கும் புதுச்சேரியில் மேலும் சில ஏடிஎம் கார்டு மோசடி ஆசாமிகளுடன் தொடர்பு இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் எஸ்பி செல்வம் உத்தரவுக்கிணங்க சிபிசிஐடி காவல்துறையினர் கல்விநாதன், ககன்குமார் இருவரையும் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.  இதற்காக புதுச்சேரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் முறையிட்டுள்ளனர். அதில் ஒருவாரம் விசாரணைக்கு அனுமதி கேட்டுள்ளனர். நீதிபதி ஒப்புதல் வழங்கியதும் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துகின்றனர். அப்போது இவ்வழக்கில் மறைந்திருக்கும் பல உண்மைகள் அம்பலமாகும் என தெரிகிறது. புதுவையில் சில மாதங்களுக்கு முன்பு போலி ஏடிஎம் கார்டு மோசடி வழக்கு பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் அதிமுக முன்னாள் பிரமுகர் சந்துருஜி, அரசு டாக்டர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளை தவிர்த்து மற்றவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் புதுவையில் தற்போது மீண்டும் போலி ஏடிஎம் கார்டு மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் சிக்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது பிடிபட்ட கல்விநாதன், ககன்குமார் இருவரும் ஆரோவில் கடற்கரை ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர். இது ஏற்கனவே ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் சிக்கிய அதிமுக பிரமுகர் சந்துருஜியின் ஓட்டல் இருந்த பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதாகும்.

 சுற்றுலா பார்வையாளர்கள் போர்வையில் வந்து தங்கி ெசன்றதும் போலீசுக்கு சந்தேகத்தை வலுத்துள்ளது. இதனால் மாஜி குற்றவாளிகளின் கூட்டாளிகளாக இவர்கள் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே காவல் விசாரணையின்போது அப்பகுதிக்கு இருவரையும் அழைத்து சென்று சிபிசிஐடி விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதற்காக அவர்களின் செல்போன் நம்பரை கைப்பற்றி விசாரிக்க உள்ளனர்.

 இதனால் இவ்வழக்கில் மேலும் பலர் விரைவில் சிக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே பிடிபட்டு ஜாமீனில் வெளியே இருப்பவர்களையும் சைபர் க்ரைம் பிரிவு ரகசியமாக கண்காணித்து வருகிறது. அவர்கள் யார் யாருடன், எந்தெந்த வகையில் தொடர்பில் உள்ளனர் என்பதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் ஆன்லைன் தொடர்பு சேவைகளும் திரைமறைவில் கண்காணிக்கப்படுவதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: