சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்

காரைக்கால், நவ. 20:  காரைக்காலில் சாலையோரம் உள்ள கஜா புயல் குப்பைகளை, உடனே அப்புறப்படுத்தவேண்டும் என, தேசிய ஒருமைப்பாட்டு விழாவிற்கு வருகை தந்த அமைச்சர், கலெக்டரிடம் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர். காரைக்காலில் கடந்த 15ம் தேதி கஜா புயல் வீசியது. இதில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டதே தவிர, இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால் சாலைகள் எங்கும் மலைபோல் மரங்களின் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. ஒரு சில இடங்களில் வீட்டு குப்பைகளும் மர குப்பைகளோடு சேர்ந்துள்ளது. பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை கூடுதல் ஊழியர்களை வைத்து சீர்செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேசிய ஒருமைப்பாட்டு வாரவிழா தொடங்கியபோது, விழாவிற்கு வந்திருந்த பிரமுகர்களிடம் கஜா புயல் பாதிப்பு, நிறைகுறைகளை கேட்டு தீர்வு காணவேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்பேரில், கலெக்டர் கேசவன் விழாவிற்கு வந்திருந்த பிரமுகர்களிடம் நிறைகுறைகளை கேட்டார். அப்போது, சாலையெங்கும் மலைபோல் கிடக்கும் மர குப்பைகளாலும், தேங்கியுள்ள மழை நீராலும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. டெங்கு அச்சம் உள்ள நிலையில் இதுபோன்ற குப்பைகளை உடனே சரி செய்யவேண்டும். மின்சார வசதிகளை முழுமையாக சீர்செய்யவேண்டும் என பிரமுகர்கள் பலர் வலியுறுத்தினர்.

இதற்கு, கலெக்டர் கேசவன் பதில் அளித்து கூறியது; இன்று இரவுக்குள் விடுபட்ட அனைத்து இடங்களிலும் மின்சாரம் வழங்கப்படும். ஹேண்ட் அன்டு ஹேண்ட் என்ற தனியார் நிறுவனம் மூலம் சாலையோரம் உள்ள மரங்களின் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தேங்கியுள்ள மழை நீர், கிராமங்களில் உட்புகுந்த கடல்நீரை பொதுப்பணித்துறையினர் சரி செய்வார்கள். இன்னும் 2 நாளில் அனைத்து பணிகளும் நிறைவு பெறும்

என்றார்.

Related Stories: