அழகிய சிற்பங்கள் செதுக்கும் பணி தொடக்கம் கலெக்டர் உத்தரவின்பேரில் நடவடிக்கை கிரிவலப்பாதையில் பட்டுப்போன மரங்களில்

திருவண்ணாமலை, நவ.16: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன மரங்களில் இருந்து, அழகிய சிற்பங்களை உருவாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள 100க்கும் மேற்பட்ட மரங்கள் திடீரென காய்ந்து, பட்டுப்போக ஆரம்பித்தது. சில சமூக விரோதிகள் மரங்களில் ஆசிட் ஊற்றி அழித்து வருவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, நடந்த ஆய்வில் மரங்களில் தண்டு துளைப்பான் இனத்தை சேர்ந்த வண்டுகளின் தாக்கத்தினால், மரங்கள் பட்டுபோனது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மரங்களில் தார், மண்ணெண்ணெய் பூசுதல், துளையிட்டு பூச்சுக் கொல்லி மருந்துகளை செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், கிரிலப்பாதையில் ஏற்கனவே பட்டுப்போன மரங்கள் அகற்றப்படாமல் இருந்தது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, பட்டுப்போன மரங்களை அகற்றாமல், அவற்றில் அழகிய சிற்பங்களை செதுக்க முடிவு செய்தார்.

அதன்படி, மகாபலிபுரத்தை சேர்ந்த சிற்ப கலைஞர் மதுரை மணிகண்டராஜ், என்பவரை கலெக்டர் தொடர்பு கொண்டு, பட்டுப்போன மரங்களில் அழகிய சிற்பங்களை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், மணிகண்டராஜ் தலைமையில் 4 கலைஞர்கள் மரச்சிற்பங்களை உருவாக்கும் பணியில் நேற்று முன்தினம் தொடங்கினர்.

இதுகுறித்து, சிற்ப கலைஞர் மதுரை மணிகண்டராஜ் கூறுகையில், `திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன நிலையில் உள்ள 62 மரங்களில், பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

தற்போது, தீபத்திருவிழாவை முன்னிட்டு முதல் கட்டமாக அரசுக்கலைக்கல்லூரி அருகே உள்ள மரத்தில் சிற்பங்களை உருவாக்கும் பணியில் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் ஆப்பிரிக்கன் ஓணான், மரக்கொத்தி பறவை ஆகியவற்றின் உருவம் செதுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

Related Stories: