பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி, நவ. 16: கஜா புயல் காரணமாக புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் தேங்காய்திட்டு துறைமுகத்தில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடற்கரை பகுதிகள் அனைத்தும் உஷார் நிலையில் வைக்கப்பட்டது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல்  காரணமாக திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. தேசிய பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கஜா புயல் காரணமாக புதுச்சேரியிலும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெரிய வாய்க்கால்கள், கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் கடந்த ஓரிரு நாட்களாக தூர்வாரப்பட்டன. தேசிய பேரிடர் குழுக்கள் தாழ்வான பகுதிகளில் மக்களை சந்தித்து புயலின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 மேலும் மழைவெள்ளம் தேங்கும் பகுதிகளை புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ஆய்வு செய்து மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். இதுதவிர முதல்வர் நாராயணசாமியும், அமைச்சர்களும், அரசு உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசு இயந்திரத்தை தயார் நிலையில் வைத்துள்ளனர். அவசர கால சேவை தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டன. அதன்படி நேற்று அனைத்து அரசு துறைகளிலும் ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி பணிக்கு வராத ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என எச்சரித்தது. புயலின்போது தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்படும் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதியாக அங்கன்வாடி மையங்கள், சமுதாய நலக்கூடங்கள், பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று காலை லேசான மேகமூட்டத்தை காணமுடிந்தது. ஆனால் மழைக்கான அறிகுறி ெதன்படவில்லை. இருப்பினும் புதுச்சேரி துறைமுகத்தில் காலை 6.30 மணியளவில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

 காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 300 மீன்பிடி படகுகள் தேங்காய்திட்டு துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் வீராம்பட்டினம், வைத்திக்குப்பம், நல்லவாடு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட 18 மீனவ கிராமங்களிலும் 500க்கும் மேற்பட்ட படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. புயல் கரையை கடக்கும்போது கனமழையுடன் கடல் சீற்றம் அதிகரிக்கும் என்பதால் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் உஷாராக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்பகுதிகளில் காவல்துறையினர் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கடற்கரை, துறைமுகம்

பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே நேற்று பிற்பகல் 2 மணிக்கு புதுச்சேரி துறைமுகத்தில் 9ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. 3ம் கூண்டில் இருந்து நேரடியாக 9ம் புயல் கூண்டு ஏற்றப்பட்டதால் மீனவ கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. கஜா புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படகு குழாம் இயங்கவில்லை: கஜா புயல் காரணமாக புதுவை சுற்றுலா தலங்களில்  ஒன்றான நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் படகுசேவை  நிறுத்தப்பட்டது. அங்கு சுற்றுலா பணிகள், பொதுமக்கள் யாரும்  அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் ஊசுட்டேரியிலும் படகு சவாரி நிறுத்தப்பட்டன. புயல் வீசும்போது சாலையோரங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழும்  என்பதால் மின்துறையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை நேற்று பேரிகார்டுகள் போட்டு மூடப்பட்டது. பழைய  சாராய ஆலை மற்றும் டூப்ளே சிலை அருகே போலீசார் நிறுத்தப்பட்டு  போக்குவரத்தும் அப்பகுதியில் தடை செய்யப்பட்டன. வழக்கமாக பொதுமக்கள்,  சுற்றுலா பயணிகள் பகல் நேரங்களில் அதிகளவில் வந்து மகிழ்வது வழக்கம். ஆனால் நேற்று வழக்கத்தைவிட கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள்  அங்குவர தடை விதிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதியில்  பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு யாரையும் கடற்கரை பகுதிக்குள் அனுமதிக்காமல் எச்சரித்து அனுப்பினர். இதுதொடர்பாக ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: