மஞ்சூர் அருகே யானைகள் முற்றுகை வனத்துறையினர் கண்காணிப்பு

மஞ்சூர், அக்.16: மஞ்சூர் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கரியமலை பெரியார்நகர். நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றிலும் விவசாயிகள் மேரக்காய், வாழை மற்றும் மலை காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.

 இந்நிலையில் 2குட்டிகள் உள்பட 6 காட்டு யானைகள் கடந்த 3நாட்களாக பெரியார் நகரை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் இந்த காட்டு யானைகள் அங்குள்ள தோட்டங்களில் புகுந்து மேரக்காய் மற்றும் காய்கறி பயிர் செடிகளை நாசம் செய்து வருகின்றன.

மேலும் மேரக்காய் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையையும் காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியுள்ளது. குடியிருப்புகளை ஒட்டியே காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளதுடன் இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீடுகளில் இருந்து வெளியேற முடியாதநிலை உள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சரவணன் மேற்பார்வையில் வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: