தேசிய மீட்புக்குழு இசிஆரில் பேரிடர் ஒத்திகை

புதுச்சேரி,  நவ. 15: புதுச்சேரி, தமிழகத்துக்கு கஜா புயல் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர்  மீட்புக் குழுக்கள் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தடைந்தது. 25 பேர்  கொண்ட ஒரு குழு புதுச்சேரியிலும், மற்றொரு குழு காரைக்காலிலும்  முகாமிட்டுள்ளது. அவர்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பேரிடர்  முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில்  நேற்று, லாஸ்பேட்டை இசிஆரில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளுக்கு சென்ற  தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கமாண்டர் அமர் தலைமையில் முன்னெச்சரிக்கை  ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

 பின்னர் கடந்த மழையின்போது  பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், ஜெயராம் நகர், ரெயின்போ நகர், ஜவஹர் நகர்  உள்ளிட்ட பகுதிகளை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் தலைமையில் அவர்கள்  ஆய்வு செய்தனர்.

 அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் புயல் வந்தால்  பயப்பட தேவையில்லை. உடனடியாக கண்ட்ரோல் அறைக்கு தகவல் தெரிவித்தால்  பேரிடர் மீட்புக் குழுவினர் உங்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வர்  என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் எந்தெந்த வகையில் மீட்பு  பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பாகவும் அவர்கள் பொதுமக்கள்  முன்னிலையில் செயல்விளக்கம் அளித்தனர். அதன்பிறகு காலாப்பட்டு சென்ற தேசிய  பேரிடர் மீட்புக் குழுவினர் அங்குள்ள மீனவ கிராமங்களிலும் பேரிடர்  விழிப்புணர்வு நிகழ்வில் ஈடுபட்டனர்.

Related Stories: