மது விற்பனை அமோகமாக நடைபெற நூதன வழிபாடு வந்தவாசி டாஸ்மாக் கடையில்

வந்தவாசி: வந்தவாசி பழைய பஸ் நிலையம் எதிரே கோட்டை அகழி பகுதியில் மறைவான இடத்தில் நேற்றுமுன்தினம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அப்போது எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது, வியாபாரமும் அமோகமாக நடைபெற வேண்டும் என்று வேண்டி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, ரவிக்குமார் ஆகியோர் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். அவர்கள் குவாட்டர் பாட்டில், தேங்காய், கற்பூரம், வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். அப்போது குவாட்டர் பிராந்தி பாட்டிலை திறந்து சிறிதளவு பூமியில் ஊற்றிவிட்டு அங்கிருந்த ஒருவருக்கு இலவசமாக வழங்கினர். வந்தவாசி நகரில் ஆரணி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 2 நாட்களுக்கு முன்பு தான் அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அச்சரப்பாக்கம் சாலையில் நேற்றுமுன்தினம் புதிதாக டாஸ்மாக் கடை திறந்தபோது பொதுமக்கள் கடையை திறக்க விடாமல் போராட்டம் நடத்தியதால் 30 நிமிடத்தில் கடையை மூடினர். எனவே இந்த கடைக்கு பிரச்னை வரக்கூடாது, விற்பனை அமோகமாக இருக்க வேண்டும் என்று ஊழியர்கள் இவ்வாறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: