முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம்

கடையம், நவ. 14:  கடையம், பாவூசத்திரம், சங்கரன்கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்மன் கோயிலில் சன்னதி கொண்டுள்ள முருகப்பெருமான், சூரசம்ஹாரத்திற்காக கடையம் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலுக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், விஷேச தீபாராதனையை தொடர்ந்து முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்து பழைய போலீஸ் ஸ்டேஷன் முன்பு சூரனை வதம் செய்தார். பின்னர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இன்று வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

ஆழ்வார்குறிச்சி நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள முருகர், குதிரை வாகனத்தில் எழுந்தருளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பஸ் நிலையம், சமுதாய நலக்கூடம், பாப்பான்குளம் ரோடு, கோயில் முன்பு ஆகிய இடங்களில் பல்வேறு உருவங்களில் வந்த சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமலையப்பபுரம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடந்தது. இங்குள்ள மெயின் ரோட்டில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிறப்பு பூஜைகள், விஷேச தீபாராதனை நடந்தது. இன்று திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. பாப்பான்குளம் பழநி ஆண்டவர் கோயிலில் கந்தசஷ்டி விழாவான நேற்று காலை முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், விஷேச பூஜை நடந்தது. மாலையில் முருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். பின்னர் விஷேச பூஜைகள் நடந்தது. இன்று மதியம் 1 மணிக்கு அபிஷேகம், இரவு 8 மணியளவில் திருக்கல்யாணம், ஆறுமுக அர்ச்சனை நடக்கிறது.

ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரை, கடையம் வாசுகிரிமலை, சிவசைலம் சிவசைலநாதர் கோயில், ரவணசமுத்திரம் சொக்கலிங்கநாதர் கோயில்களில் எழுந்தருளியுள்ள முருகர் உள்பட கடையம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா சிறப்பு வழிபாடு நடந்தது.

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் 8ம் தேதி துவங்கிய கந்தசஷ்டி  விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது.  சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்றைய கட்டளைதாரர்களான சுவாமி  விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை  சஷ்டி ஹோமம், தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  சூரனை முருகன் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம், மாலையில் நடந்தது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் மும்முக சூரனை வதம்  செய்தார். இந்நிகழ்ச்சியை பக்தர்கள் பக்திபரவசத்துடன் கண்டுகளித்தனர்.

இன்று  காலை அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை,  தீபாராதனை, மாலை 6 மணிக்கு பக்தர்கள் சுவாமி காட்சி அருளுதல், இரவு 8  மணிக்கு சுவாமி - அம்பாளுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது. நாங்குநேரி  திருநாகேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர் சன்னதியில்  கந்தசஷ்டி விழா நடந்தது. இதையொட்டி சுப்பிரமணியர், வள்ளி -தெய்வானைக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து விரதமிருந்த  பக்தர்கள், சஷ்டி கவசம் பாடினர். பின்னர் சுப்பிரமணியருக்கு சிறப்பு  தீபாராதனை நடந்தது. மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. பல்வேறு அவதாரம்  எடுத்த வந்த சூரனை சுப்பிரமணியர் வேலால் வதம் செய்தார். இந்நிகழ்ச்சியில்  பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

களக்காடு  சத்தியவாகீஸ்வரர் -கோமதி அம்பாள் கோயிலில், கடந்த 8ம் தேதி திருக்காப்பு  கட்டும் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் மாலையில்  முருகப்பெருமான் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். விழாவின் முக்கிய  நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி  முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து  முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவாக கோயில்  வடபுறமுள்ள திடலுக்கு வந்தார். அங்கு சூரபத்மனை முருகப்பெருமான் வதம்  செய்தார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர்  கோயில் ராஜகோபுர மண்டபத்திற்கு எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு சிறப்பு  அபிஷேகங்கள் நடந்தது. இரவில் மயில் வாகனத்தில் காட்சி அளித்தார். 7ம் நாளான  இன்று முருகப்பெருமான், தெய்வானை அம்பாள் திருக்கல்யாண விழா நடக்கிறது.

சங்கரன்கோவில்  சங்கர நாராயண சுவாமி கோயிலில் கந்தசஷ்டியையொட்டி விழா நாட்களில் வள்ளி,  தெய்வானை சமேத சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது.  முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு  சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்களும், சுப்பிரமணிய சுவாமி குதிரை  வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் மண்டகப்படிக்கு எழுந்தருளும்  நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து கோயிலில் உள்ள  வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன.  கோமதி அம்பாள் சுப்பிரமணியருக்கு வேல் வழங்கியதையடுத்து சுவாமி ரத  வீதிகளில் அக்கினிமுகாசுரன், தருமகோபசூரன், பானுகோபசூரன், சிங்கமுகாசூரன்  ஆகியோரை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சண்முகர்  சூரபத்மன் அனுக்கிரஹம் செய்யும் நிகழ்ச்சியும், சூரபத்மன் சேவற்கொடி,  மயிலுமாக மாறி சுவாமியை பணிதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள்  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: