கரூர் லைட்ஹவுஸ் கார்னர் - உழவர் சந்ைத வரை தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்,அக்.26: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து உழவர் சந்தை பகுதி வரை தடுப்புச் சுவர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைப் பகுதியின் மையப்பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் விபத்தினை தடுக்கும் வகையில் ஒருசில பகுதியில் தடுப்புச் சுவரும், சில பகுதிகளில் சென்டர்மீடியனும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரூர் மனோகரா கார்னர் பகுதியில் இருந்து உழவர் சந்தை வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால், உழவர் சந்தையில் இருந்து லைட்ஹவுஸ் கார்னர் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், ஜவஹர் பஜார், பிரம்மதீர்த்தம் சாலை, படிக்கட்டுத்துறை போன்ற பகுதிகளுக்கு பிரிந்து செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல் போன்ற முக்கிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையில்தான் சென்று வருகிறது.

அதிக வாகன போக்குவரத்து காரணமாக, இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உழவர் சந்தை முதல் லைட்ஹவுஸ் கார்னர் வரை தடுப்புச் சுவர் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: