பத்திரம் பதிவு செய்வதில் தாமதம் உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா

உடுமலை, அக். 16: பத்திரம் பதிவு செய்வதில் தாமதம் செய்வதாக கூறி உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடுமலை அருகே உள்ள கண்ணமநாயக்கனூர் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்படாமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.இதுபற்றி கேட்டால், உங்கள் பகுதி வக்பு போர்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதால் வட்டாட்சியரிடம் செல்லுங்கள் என்கின்றனர். வட்டாட்சியரிடம் கேட்டால், சார் பதிவாளர்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்கிறார். இதனால் இரு அலுவலகத்திலும் உள்ள அதிகாரிகளால் மக்கள் கடந்த சில மாதங்களாக மாறி மாறி அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணமநாயக்கனூர் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று சார் பதிவாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா செய்தனர். சமாதானம்செய்ய வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுபற்றி செல்வராஜ் என்பவர் கூறுகையில், 38 ஏக்கர் 72 சென்டில், ஒரு ஏக்கர்தான் வக்பு போர்டுக்கு சொந்தமானது. இது தொடர்பாக வக்பு போர்டு நிர்வாகிகளும் நிலத்தை அளந்து தங்களுக்குள்ள ஒரு ஏக்கர் நிலத்தை உறுதி செய்து அறிக்கை அளித்து விட்டனர். ஆனால் பத்திரப்பதிவு அதிகாரி அந்த இடத்தை பதிவு செய்ய மறுக்கிறார். இதனால் 37 ஏக்கரில் குடியிருப்போர் யாரும் நிலத்தை விற்க முடியவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

Related Stories: