காளி கோயிலில் நள்ளிரவில் அகோரிகள் யாகம், சிறப்புபூஜை

திருச்சி, அக்.12: திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின்கரையில் உள்ள ஜெய்  அகோரகாளி கோயிலில் நவராத்திரி விழாவின் 2வதுநாள் நள்ளிரவு அகோரிகள் யாகம்  வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினர்.

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை  விவேகானந்தா நகரை சேர்ந்த தம்பதி ராஜகோபால்- மேரி. காதலித்து திருமணம்  செய்து கொண்டவர்கள். இவர்களது மகன் மணிகண்டன்(38). சிறு வயதிலேயே காசிக்கு  சென்று அகோரியாக மாறி விட்டார். உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு  நள்ளிரவில் பூஜை செய்வது, சுடுகாட்டில் எரியும் சடலத்தின் மாமிசத்தை  சாப்பிடுவது ஆகிய செயல்பாடுகளில் அகோரிகள் ஈடுபடுவர். திருச்சி  அரியமங்கலம் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது.  இதை மணிகண்டன் நிர்வகித்து வருகிறார். இக்கோயிலில் 6 மாதங்களுக்கு முன்  அஷ்ட கால பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதிருந்து கோயிலில்  அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி உள்ளிட்ட விசேஷ காலங்களில் நள்ளிரவில்  சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

அகோரி மணிகண்டனுடன் எப்போதும் 10  அகோரிகள் இருப்பர். மணிகண்டனின் தாய் மேரி(70) கடந்த வாரம் இறந்தார்.  அப்போது அகோரி மணிகண்டன் அவரது உடல் மீது அமர்ந்து பூஜை செய்தது பரபரப்பை  ஏற்படுத்தியது.

இந்நிலையில் நவராத்திரி விழா துவங்கியதை முன்னிட்டு ஜெய்  அகோர காளி கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக  காளி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆரத்தி  வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து  நள்ளிரவு 12 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டது. அகோரி மணிகண்டன் யாகம்  வளர்த்தார்.இதில் 10க்கும் மேற்பட்ட அகோரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.  யாகம் நடந்த போது அகோரிகளில் ஒருவர் தலைகீழாக நின்று மந்திரங்கள் ஓதினார்.  சிலர் சங்குகளை ஒலித்தனர். பின்னர் காளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.  யாகமும், பூஜையும் அதிகாலை 3 மணி வரை நடந்தது.

தொடர்ந்து 9 நாள் காளி  அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெறும். நேற்றுமுன் தினம் நடந்த  பூஜையில் கங்கையின் தீர்த்தம் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

9 நாளும்  ஒவ்வொரு புண்ணிய நதியின் நீரைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப் படும்  என்று கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: