திருவேங்கடம் அருகே சகதிகாடான சாலையில் நாற்றுநடும் போராட்டம்

திருவேங்கடம், அக். 11:  திருவேங்கடம் அருகே சகதிகாடான சாலையில் மாணவ, மாணவிகள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவேங்கடம் அடுத்துள்ள கலிங்கப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த மேலமரத்தோணி மற்றும் கீழமரத்தோணியில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் இருந்து கலிங்கப்பட்டிக்கு செல்ல நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது.

மேலும் கலிங்கப்பட்டியில் இருந்து மரத்தோணி, சுப்புலாபுரம் வழியாக கரிவலம்வந்தநல்லூருக்கு சென்றால் தூரம் குறைவு என்பதால் தினமும் 500க்கும் மேற்பட்ட மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையானது பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டு வருகிறது.

மழை காலங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பலர் தடுமாறி கீழே விழுந்தும் படுகாயமடைகின்றனர்.

சமீபத்தில் பெய்த மழையில் இந்த சாலையில், கலிங்கப்பட்டி பெரியகுளம் கண்மாய்க்கு அருகே சகதிகாடாக மாறியுள்ளது. இதையடுத்து இந்த சாலையை பயன்படுத்தும் மாணவ, மாணவிகள், பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கையும் விடுத்தனர்.

Related Stories: