சாலையோர வியாபாரிகளுக்கு நியாயம் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

திருப்பூர், அக்.5: சாலையோர வியாபாரிகளுக்கு நியாயம் கேட்டு மாநகராட்சி அலுவலகம் முன்பு 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க (சிஐடியு) கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 இதற்கான கூட்டம், நிர்வாகி நடராஜன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் பாலன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், திருப்பூர் பழைய பஸ் நிலையம் மற்றும் காமராஜர் சாலை பகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக 75க்கும் மேற்பட்டோர் சாலையோர வியாபாரிகளாக மலிவுவிலை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, தள்ளுவண்டிகளில் பனியன், ரெடிமேட் துணி, பழம், பொறி, செருப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசின் சாலையோர வியாபாரிகளுக்கான தேசிய கொள்கையின் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகமும் அங்கீகார அட்டை வழங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு இவர்களை போலீசார் வியாபாரம் செய்யவிடாமல் அப்புறப்படுத்தினர். தினமும் வியாபாரம் செய்து ஈட்டக்கூடிய சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தரப்பில் இவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை மேற்கண்ட அதே பகுதியில் வியாபாரம் செய்ய மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.   இக்கோரிக்கை குறித்து திருப்பூர் தெற்கு எம்எல்ஏ குணசேகரன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் ஆகியோருக்கு மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. வரும் 12ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அங்கிருந்து நடைபயணமாக சென்று கமிஷனர் மனோகரனிடம் கோரிக்கை மனு அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: