அனைத்து ஆறுகளிலும் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை

திருவாரூர்,செப்.25: அனைத்து ஆறுகளிலும் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்து இது குறித்து அதன் மாநில துணை செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,   மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 19ம்்தேதி திறந்து இரு மாதங்கள் கடந்தும் தற்போது வரையில் விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்தும் நிலை உள்ளது.  ஆகஸ்ட் 15 முதல் 30க்குள் நீண்ட கால ரகம், செப்டம்பர் 15க்குள் நடுத்தர காலரகம், அதன் பின்னர் தற்போது குறுகிய கால ரக விதைகளை விதைக்க வேண்டும் என வேளாண்துறையின் அறிவுரைப்படி சாகுபடி நடைபெறுகிறதா என்பது கேள்வி குறியாகிவிட்டது. விதைக்கப்பட்ட நீண்ட கால ரக விதைகள் முளைத்தது, கருகி விட்டன. நடுத்தர கால விதைகள் விதைத்தது விதைத்தாகவே முளைவிடாமல் போய்விட்டது. காலம் கடந்ததால் குறுகிய கால விதைகளை கூட விதைத்திடுவதற்கு இதுவரையில் தண்ணீர் வயலுக்கு வரவில்லை.  

எனவே நம்பிக்கையற்ற நிலையில் நடப்பாண்டு சாகுபடியை மேற்கொண்டும் விவசாயிகள் அச்சத்துடனேயே உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் போராட்டம்  நடைபெற்றது.  தற்போது தேவைக்கு மேல்  நீர் கிடைத்தும் - வயல்வெளிகளை  தண்ணீர் சென்றடையாமல் போராட்டம் நடைபெறுகிறது.  இது வரையில் நீர் கேட்டு  கர்நாடகத்திற்கு எதிராக விவசாயிகள் போராடி வந்த நிலை மாறி  இப்போது தமிழக அரசின் நிர்வாகத்திற்கு எதிராக போராடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத மத்தியில் துவங்கும் என்ற நிலையில் அதற்கு முன் நெற்பயிர்களை வளர்த்து ஆளாக்கிட வேண்டும் என்ற சூழலில் விவசாயிகள் இருந்து வரும் நிலையில் அதற்கேற்ப மேட்டூர்  அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்தால் என்ன என்று விவசாயிகளிடத்தில் கேள்வி எழுந்துள்ளது. எனவே உடனடியாக அனைத்து ஆறுகளிலும்  கூடுதல் நீர் திறப்பதற்கு உரிய நடவடிக்கை யினை தமிழக அரசு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: