இந்திய கம்யூ. அலுவலகத்தில் நிர்வாகிக்கு கத்திவெட்டு

பாகூர், செப். 25: புதுவை மாநிலம் பாகூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிர்வாகியை தொழிலாளி கத்தியால் வெட்டினார். படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக தொழிலாளியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பாகூர், வில்லியனூர் மெயின் ரோடு, குடியிருப்பு பாளையம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயபாலன் (50). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தொகுதிக்குழு உறுப்பினராகவும், புதுவை மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராகவும் உள்ளார்.இவர் நேற்று காலை பாகூர், கன்னியகோயில் ரோடு, மாதா கோயில் பின்புறமுள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு வழக்கம்போல் பேப்பர் படிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாகூர்பேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளி தர் (45) என்பவர் அவரிடம் தனது குடும்ப விவகாரம் குறித்து விஜயபாலனிடம் முறையிட்டதாக தெரிகிறது.ஏற்கனவே விவசாய தொழிலாளர் சங்க போராட்டங்களில் பங்கேற்று வந்த தர், கடந்த 3 வருடமாக கட்சியுடன் எந்த தொடர்பிலும் இல்லாத நிலையில் அவருக்கு சாதகமான நடவடிக்கையை மேற்கொள்ள விஜயபாலன் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தின் பின்புற பகுதியில் வெட்டியுள்ளார்.வெட்டுக்காயம் விழுந்து விஜயபாலன் கூச்சலிடவே சத்தம் கேட்டு அருகிலுள்ள வியாபாரிகள் அங்கு ஓடிவந்தனர். அப்போது கத்தியுடன் நின்றிருந்த தரை அவர்கள் பிடிக்க முயன்றனர். இதையடுத்து பொதுமக்களுக்கும் தர் மிரட்டல் விடுத்தார். ஆனால் மக்கள் ஒன்றுதிரண்டு தரை மடக்கி பிடித்து பாகூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மேலும் படுகாயமடைந்த விஜயபாலனை உடனே அருகிலுள்ள பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் விஜயபாலனுக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கத்தியால் வெட்டப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் மருத்துவமனையில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் திரண்டனர். இதையடுத்து அங்கு பெரியகடை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொலைவெறி தாக்குதல் தொடர்பாக பாகூர் இன்ஸ்பெக்டர் சிவகணேஷ் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து தரிடம் அதிரடியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: