கொமந்தான்மேட்டில் ₹4 கோடியில் புதிய பாலம்

புதுச்சேரி, செப். 21:  புதுவை பாகூர் அருகே கொமந்தான்மேட்டில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் புதுச்சேரி- கடலூரை இணைக்க கூடிய தடுப்பணையுடன் பாலம் கட்டப்பட்டு இருந்தது. இதை பாகூர் மற்றும் கடலூரையொட்டி உள்ள கிராம மக்களும் பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கனமழையால் இந்த பாலமும், தடுப்பணையும் உடைந்து சேதமானது. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் கலந்து வந்தது. பாலம் உடைந்து போனதால், தற்காலிகமாக அங்கு மணல் கொட்டப்பட்டு அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், நீராதாரத்தை பெருக்கவும், தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கவும் கொமந்தான்மேட்டில் ரூ.4 கோடியே 11 லட்சம் செலவில் 40 மீட்டர் நீளமும், ஒன்றரை மீட்டர் உயரமும் கொண்ட புதிய தடுப்பணையுடன் கூடிய கான்கிரீட் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணி துவக்க விழா நேற்று காலை நடந்தது. தொகுதி எம்எல்ஏ தனவேலு தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை செயலர் தேவேஷ்சிங், தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி பொறியாளர் தாமரை புகழேந்தி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: