திருப்பூர் அருகே பரபரப்பு இரு தரப்பினர் மோதல் நடவடிக்கை கோரி மறியல்

அவிநாசி, செப். 19: அவிநாசி அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.  திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கானூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இருசக்கர வாகனத்தில் தொட்டக்களாம்புதூர் பகுதிக்கு நேற்றுமுன்தினம் போதையில் சென்று ஒரு சிலரிடம் தகராறில் ஈடுபட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அவிநாசி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, சிலர் கானூரில் இருந்து கோஷ்டியாக மீண்டும் தொட்டக்களாம்புதூருக்குச் சென்று வீடுகளில் புகுந்து பிரதீப் (31), ரங்கசாமி (50), சாந்தாமணி (44) உள்பட 5 பேரை தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், வீடுபுகுந்து தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நேற்று முன்தினம் நள்ளிரவு கருவலுார் பஸ் ஸ்டாண்டில் இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், பேச்சுநடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால், அவிநாசி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த தொட்டக்களாம்புதூர் மக்கள் ஒன்றுதிரண்டு கருவலூர் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மீண்டும் சாலை மறியலில்  ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சுமார் 2 மணி நேரம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், டிஎஸ்பி பரமசாமி ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: