சாலையில் விழுந்த பழமை வாய்ந்த புளியமரம்

வில்லியனூர், செப். 18: வில்லியனூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த புளியமரத்தை 2 நாட்களாக அகற்றாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் இடி-மின்னல், பலத்த காற்றுடன் மழைபெய்தது. அப்போது பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழந்தன. மின்னல் தாக்கி மாடு பலியாகின. இந்நிலையில் வில்லியனூர் அருகே ராமநாதபுரம் பகுதியில் சாலையோரம் இருந்த பழமையான புளிய மரம் ஒன்று வேறோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மறுநாள் விடுமுறை நாள் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிக்கு வராததால் மரத்தை அகற்ற நடடிவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. திங்கட்கிழமையான நேற்றும் அதே நிலை தொடர்ந்ததால் இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என நூற்றுக்கணக்காணோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.பிறகு பொதுமக்களே ஒன்று கூடி மரத்தை வெட்டி போக்குவரத்தை சீரமைக்க முயற்சி செய்தனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து மரத்தை வெட்டி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Related Stories: