விசைப்படகு உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரி,  செப். 12:  புதுச்சேரி அடுத்துள்ள தேங்காய்திட்டு பகுதியில் செயல்பட்டு வரும்  துறைமுகத்தில் முகத்துவாரம் தூர் வாரப்படாததால் விசைப்படகு மீனவர்கள்  நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில்  கடந்த சில மாதங்களாகவே துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளை இயக்க  முடியாமல் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து பலகட்ட  போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது துறைமுக பகுதியில்  ஆழம் அளவிடும் ஆய்வு  பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அப்பகுதியில் குவியும் மணலை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மீன்பிடித்துக் கொண்டு  துறைமுகத்துக்கு திரும்பிய 10 விசைப் படகுகள் முகத்துவாரத்தின் மீது மோதி  மீண்டும் சேதமடைந்தது. இதனால் விசைப்படகுகளை இயக்க முடியாததால் நேற்று 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டு

மரங்களை இயக்காமல்  மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நிறுத்தி வைத்தனர்.  மேலும்  முத்துவாரத்தை தூர்வார பலமுறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை  வைத்தும் நடவடிக்கை இல்லை என மீனவர்கள் வேதனையுடன்  தெரிவித்தனர். மீனவர்கள் வேலை  நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனிடையே  விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் அனைவரும் நேற்று முன்தினம்  தேங்காய்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர்  அவர்கள் அனைவரும் மரப்பாலம் சந்திப்பில் திரண்டு திடீரென மறியலில்  ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி- கடலூர் சாலையில் அரைமணி நேரத்துக்கும்  மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 தகவல் கிடைத்து விரைந்து  வந்த முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன்,  தமிழரசன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிதுநேரம்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து மீனவர்கள் கூறுகையில்,  முகத்துவாரத்தை தூர்வாரும் வரை விசைப் படகுகளை இயக்க மாட்டோம். இதுதொடர்பாக  பலமுறை மீன் வளத்துறையிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இதனால் இத்தொழிலை நம்பியுள்ள 3 ஆயிரம் மீனவ குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: