வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் தஞ்சை டிஆர்ஓ அறிவிப்பு

தஞ்சை, செப். 12: வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் வெள்ள சேதம் மற்றும் இதர புகார்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து டி.ஆர்.ஓ.சக்திவேல் பேசியது: வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட செய்து முடிக்க வேண்டும். ஓராண்டில் பெய்யும் மழையளவில் 48 சதவீத மழை வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் வெள்ள சேதம் மற்றும் இதர புகார்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதை வெளியேற்ற மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் கொசு முட்டைகள் உற்பத்தியாகாத வகையில் தூய்மை செய்தல் வேண்டும். நீரினால் பரவும் நோய்களை தடுக்க தேவையான அளவு குளோரின் கலந்த நீரை மக்கள் பயன்பாட்டுக்கு வினியோகம் செய்ய வேண்டும். தீயணைப்புத்துறையினர் வெள்ள காலங்களில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவமழை காலங்களில் ஏற்படும் சேதங்கள் குறித்த கணக்குகளை வருவாய் துறையினர் பதிவு செய்ய வேண்டும். நிவாரண மையங்களான மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அரசு பள்ளிகள், சமுதாய கூடங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த உரிய பணியாளர்களுடன் பொக்லைன் இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உணவு பொருள் வழங்கல் துறையினர் மழைக்காலங்களில் தேவைப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றார்.

Related Stories: