நரிக்குடி அருகே கிருதுமால் நதியில் மணல் திருட்டு அதிகாரிகள் கப்சிப்

திருச்சுழி, ஆக. 14:  நரிக்குடி அருகே, கிருதுமால் நதியில் மீண்டும் மணல் திருட்டு நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை மாவட்டம், விரகனூரிலிருந்து அம்பலத்தாடி அணைக்கட்டு வழியாக விருதுநகர் மாவட்டம் கட்டனூர், மானூர், வீரசோழன் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வரை கிருதுமால் நதி செல்கிறது. இந்த நதியில் கடந்த 30 ஆண்டுகளாக பராமரிப்பு பணி நடக்கவில்லை. இதனால், ஆங்காங்கே சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மன்டியது. மழை பெய்தாலும் நீர்வரத்தின்றி, நதியை நம்பிய விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளியதால், ஆங்காங்கே மெகா பள்ளங்கள் உருவாகின. மழை காலங்களில் நீர்வரத்தில்லாமல், நதியை நம்பியிருந்த கண்மாய்கள் வறண்டன. கிணறுகளில் நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது. விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசாயின.

கிருதுமால் நதியை தூர்வாரக்கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் விளைவாக ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டு விரகனூரிலிருந்து கமுதி வரை தூர்வாரும் பணி நடைபெற்றது. அதன்பின்னர், நாலூர் பகுதி கிருதுமால் நதியில், அனுமதின்றி மணல் அள்ளுபவர்கள் பெரும் பள்ளங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால், மழை பெய்தாலும் நீர்வரத்தில்லை. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக கிருதுமால் நதிப்படுகையில் இரவு, பகலாக மணல் அள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘நரிக்குடி பகுதியில் கடந்தாண்டு பருவமழை ஓரளவு பெய்தது. கிருதுமால் நதி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளியதால்,  நீர்வரத்து இல்லை. இந்த ஆற்று நீரை நம்பியிருந்த கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. கிணறுகளில் நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. கண்மாய் மற்றும் கிணற்று நீரை நம்பிய நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. இது குறித்து வருவாய்த் துறையினருக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.  

இது குறித்து நாலூர் அசோக் கூறுகையில்:எங்கள் கிராமப் பகுதி  வழியாக கட்டனூர், மானூர், கமுதி வரை கிருதுமால் நதி செல்கிறது. இந்த நதியை பல ஆண்டுகளாக பராமரிக்காததால், ஆற்று நீரை நம்பியிருந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களில் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தன. கிருதுமால் நதிப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவது அதிகரித்தது. நதியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்ததன் பேரில் மதுரை விரகனூரிலிருந்து கமுதி வரை தூர்வாறும் பணி நடைபெற்றது. இந்நிலையில், தூர்வாரி சமன் செய்த ஆற்றுப்படுகையில் மீண்டும், திருட்டுத் தனமாக மணல் அள்ளி வருகின்றனர். இதனால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.   நாலூர், சொரியநேந்தல், பேச்சிலகிராமம் ஆகிய பகுதிகளில் பட்டப்பகலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மணல் அள்ளுகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலை நீடித்தால் விவசாயம் பாதிக்கப்படும்’ என்றனர்.

Related Stories: