திருவண்ணாமலை மாவட்டம் கருணாநிதி மறைவால் சோகத்தில் மூழ்கியது

* காணும் இடமெங்கும் உருவப்படத்துக்கு அஞ்சலி, அமைதி ஊர்வலம் * ஒப்பாரி வைத்து கதறியழுத பெண்கள்

திருவண்ணாமலை, ஆக.9: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் சோகத்தில் மூழ்கியது. ஆயிரக்கணக்கான இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய அரசியலில் மூத்த தலைவர், 80 ஆண்டுகால பொது வாழ்வுக்கு சொந்தக்காரர், தமிழகத்தின் 5 முறை முதல்வர், தேர்தல் களத்தில் வாழ்நாள் முழுவதும் தோல்வி காணாதவர், 50 ஆண்டுகால திமுக தலைவர் எனும் எண்ணற்ற சிறப்புகளை பெற்ற திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று முன்தினம் தமது 95வது வயதில் காலமானார்.ஈடு செய்ய இயலாத அவரது மறைவால், திருவண்ணாமலை மாவட்டம் சோகத்தில் மூழ்கியது. மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அதனால், பரபரப்பாக காணப்படும் சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்டம் முழுவதும் நகரங்கள், கிராமங்கள் என பல்லாயிரக்கணக்கான இடங்களில் திமுக தலைவரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, திமுகவினர், பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.திருவண்ணாமலை நகரில் நூற்றுக்கணக்கான வீதிகளிலும், முக்கிய சாலைகளிலும் திமுக தலைவரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தேரடி வீதியில் உள்ள பூ மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் ஆயிரம் கிலோ மலர்களால் கலைஞரின் உருவப்படத்தை அலங்கரித்து அஞ்சலிக்காக வைத்திருந்தனர்.அதேபோல், அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, திருவண்ணாமலை காந்திசிலை அருகே அலங்கரித்து வைத்திருந்த கலைஞரின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.மேலும், திமுக சார்பில் அமைதி ஊர்வலம், காமராஜர் சிலையில் தொடங்கி நகரின் முக்கிய சாலைகள் வழியாக கடந்து சென்று அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது. அதில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் காலேஜ் கு.ரவி, மாவட்ட அமைப்பாளர் டிவிஎம் நேரு, நகர இளைஞர் அணி ராஜாங்கம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதேபோல், அண்ணா நுழைவு வாயில் பகுதியில் பிரமாண்டமான அளவில் திமுக தலைவரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.திருவண்ணாமலை வேங்கிக்கால் ஜெய்பீம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், திமுக தலைவரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, ‘தீப்பிடிக்காத கான்கீரிட் வீடுகளை இலவசமாக கட்டித்தந்த தலைவரே’ என ஒப்பாரி வைத்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.அதேபோல், ஆரணி, செங்கம், செய்யாறு, வந்தவாசி, போளூர், சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், கண்ணமங்கலம், வேட்டவலம், வெம்பாக்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான இடங்களில் திமுக தலைவரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், அமைதி ஊர்வலம், மெழுகு தீபம் ஏந்தி அஞ்சலி போன்றவையும் நடந்தது.

Related Stories: