மலைவாழ் மக்களை செம்மரம் வெட்ட அழைத்து செல்ல திட்டம் : 3 பேர் கைது : ஜமுனாமரத்தூரில் இருந்து

திருவண்ணாமலை, ஆக.7: ஜமுனாமரத்தூரில் இருந்து மலைவாழ் மக்களை ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டுவதற்கு அழைத்து செல்ல திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்ய நேற்று, உதவி ஆய்வாளர் ரகு தலைமையில் போலீசார் பாக்குமுளையானூர், ஏரிக்கொள்ளை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ேராந்து சென்றனர். அப்போது, அத்திப்பட்டு கூட்ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 3 நபர்கள் போலீசாரை பார்த்ததும் வேகவேகமாக நடந்து சென்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், மலைவாழ் மக்களை ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்ட அழைத்து செல்ல திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து, மலைவாழ் மக்களை செம்மரம் வெட்ட அழைத்து செல்ல முயன்ற ஜமுனாமரத்தூர் தாலுகா அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த குணசேகர்(28), பால்வாரி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ்(23), ரகு(26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: