இந்தியில் பேசியதால் மொழி தெரியாமல் தவிப்பு பிரதமர் காணொலி நிகழ்ச்சியை விவசாயிகள் புறக்கணிப்பு

புதுச்சேரி, ஜூன் 21: பிரதமரின் காணொலி

நிகழ்ச்சியை புதுவை விவசாயிகள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி குருமாம்பேட் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரங்கத்தில் நேற்று காலை 9 மணியளவில் பிரதமர் மோடி காணொலி மூலம் விவசாயிகளுடன் உரையாடும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் வசந்தகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவதற்கான வழிமுறைகள், அரசு மற்றும் விவசாயிகளின் பங்களிப்பு குறித்து நரேந்திரமோடி உரையாற்றினார். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கிய சற்று நேரத்தில் விவசாயிகள் அனைவரும் அரங்கத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளுடன் உரையாடி விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறார். புதுச்சேரி விவசாயிகளிடமும் பிரதமர் மோடி உரையாட இருப்பதாக வேளாண் அறிவியல் நிலையத்துக்கு அழைத்தனர். அதன்பேரில் நாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். ஆனால் பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் உரையாடுவதற்கான ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் நிலையம் செய்து தரவில்லை. மற்ற மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுத்ததன் மூலம் விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் புதுச்சேரி விவசாயிகளான எங்களால் கருத்துக்களை பதிவு செய்ய முடியவில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும். வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காரைக்கால் விவசாயிகளுக்கு காவிரி நீர் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்த ஆவலுடன் வந்திருந்தோம். ஆனால் எங்கள் கருத்துக்களை பதிவு செய்ய முடியாமல் காணொலி மூலம் அவர் பேசுவதை கேட்க செய்தனர். அவர் இந்தி மொழியில் பேசுவதால் விவசாயிகள் மொழி தெரியாமல் தவித்தனர். எனவே இதை கண்டித்து நிகழ்ச்சியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என்றனர்.பிரதமர் ேமாடியின் காணொலி உரையாடல் நிகழ்ச்சியை புதுச்சேரி விவசாயிகள் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: