வேலூரில் விழிப்புணர்வு பிரசார வாகனத்துடன் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின மனித சங்கிலி : கலெக்டர் பங்கேற்பு

வேலூர், ஜூன் 13: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின மனித சங்கிலியில் கலந்து கொண்ட கலெக்டர் ராமன் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை நேற்று தொடங்கி வைத்தார். உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் மனித சங்கிலி நேற்று நடந்தது. டிஆர்ஓ செங்கோட்டையன், குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்ட இயக்குனர் ராஜபாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் தாமரை மணாளன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் அஜீம் முன்னிலை வகித்தனர்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் அருகே மனித சங்கிலி நடந்தது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். அதேபோல் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த மாட்டேன், குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற பாடுபடுவேன் என்ற வாசகம் அடங்கிய பேனர்களில் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, சைல்ட் லைன் இயக்குனர் வெங்கட்ராமன், நீதியியல் துறை தாசில்தார் முரளி, கலெக்டர் அலுவலக மேலாளர் பாலகிருஷ்ணன், குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: