வேலூர், ஜன.3: இபிஎப்ஓ நிறுவனம் இபிஎப் சந்ததாரர்கள் தங்கள் வைப்பு நிதியில் இருந்து ஏடிஎம் மையம் மூலம் பணம் எடுக்கும் வசதியை நடப்பு ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய நிலைக்கு ஏற்ப ‘இபிஎப்ஓ 3.0’ன் கீழ் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியாகும் மார்ச் 2026க்கு முன் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் இபிஎப் பணம் எடுக்கும் வசதி அறிமுகமாக வாய்ப்புள்ளதாக இபிஎப்ஓ அதிகாரிகள் தெரிவித்தனர். ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுப்பதற்கான செயல்முறை என்பது, ஏற்கனவே முன்மொழியப்பட்ட அமைப்பின் கீழ், இபிஎப்ஓ சந்தாதாரர்களுக்கு வங்கி ஏடிஎம் கார்டுகளை போலவே, வருங்கால வைப்பு நிதி பணம் எடுக்கும் கார்டுகள் வழங்கப்படும். இந்த கார்டுகள் சந்தாதாரரின் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்கப்பட்டு, குறிப்பிட்ட ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்க உதவும். புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டவுடன், இபிஎப் உறுப்பினர்கள் சில எளிய வழிகளில் பணத்தை எடுக்க முடியும்.
இதற்கு இபிஎப் உறுப்பினர்கள் முதலில் தங்கள் யுஏஎன் செயல்பாட்டில் உள்ளதையும், ஆதார், பான் மற்றும் வங்கி விவரங்கள் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளதையும், முழுமையாக கேஒய்சி இணக்கத்துடன் உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும். ஏடிஎம் மூலம் பணம் எடுக்க, இபிஎப் உறுப்பினர்கள் தங்களது இபிஎப் கார்டை ஏடிஎம்களில் பயன்படுத்தி, பின் அல்லது ஓடிபி மூலம் பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும். அதன்பின் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் பணம் எடுக்கும் தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில், இபிஎப்ஓவால் வழங்கப்பட்ட கார்டை குறிப்பிட்ட ஏடிஎம்மில் அதாவது இபிஎப்ஓ நிறுவனம் அங்கீகரித்துள்ள வங்கிகளின் ஏடிஎம் மையங்களையே பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் ஏடிஎம் பின்னை உள்ளிட வேண்டும். அல்லது ஓடிபி மூலம் பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும். பணம் எடுக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் தொகையை தேர்வு செய்து, பரிவர்த்தனையை உறுதிசெய்ய வேண்டும்.
அதன்பிறகு இபிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் பிஎப் தொகை உடனடியாக வரவு வைக்கப்படும். அதேநேரத்தில் நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பை பாதுகாக்க, ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பிஎப் இருப்பில் 75 சதவீதம் வரை எடுக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அனுமதிக்கும் என்று கூறப்படுகின்றது. மீதமுள்ள தொகை எதிர்கால தேவைகளுக்காக தொடர்ந்து வட்டி ஈட்டிக்கொண்டிருக்கும். இதற்காக, முகவரிச் சான்று, அடையாளச் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களைக் காட்டும் ஒரு காசோலை மற்றும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஆகியவை தேவைப்படும். இதற்காக, இபிஎப்ஓ நிறுவனம் 32 பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஏற்பாட்டின் கீழ், ஊழியர்களின் கணக்குகளை நிர்வகிக்கும் வங்கிகளில் நிறுவனங்கள் நேரடியாக பிஎப் பங்களிப்புகளை செலுத்தலாம். இந்த நடைமுறையால் நாடு முழுவதும் உள்ள வருங்கால வைப்பு நிதி நிறுவன சந்தாதாரர்களின் கால விரையம் தவிர்க்கப்படும் என்று வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
