பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஹைதராபாத்தில் கைது.! தனிப்படை போலீசார் அதிரடி

ஹைதராபாத்: பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த நடன பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள்  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.  

மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர்  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கலாஷேத்ரா கல்லூரிக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இந்த விவகாரம் தொடர்பாக,  மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார். இதுதொடர்பான அறிக்கையை இன்று அவர் அரசிடம் தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்கிடையே  2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்திருந்தார்.  அதன்பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

ஹைதராபாத்திலிருந்து இன்று சென்னை திரும்பும் பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில்,  கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீரென தலைமறைவாகினார்.  கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஹைதராபாத் சென்றிருந்தார், அவர் சென்னை திரும்பிய நிலையில், தலைமறைவானதாக காவல்துறை தகவல் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கேரளா விரைந்தனர். இந்நிலையில் தற்போது பேராசிரியர் ஹரிபத்மனை போலீஸார் சென்னையில் வைத்து கைது செய்திருக்கின்றனர்.

Related Stories: