‘ஏ’ சான்று வழங்கிய திரைப்படம் பார்க்க குழந்தைகளுக்கு அனுமதி மறுத்ததால் திரையரங்கு ஊழியர்களுடன் தகராறு செய்த சேலம் வளர்மதி: போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் ‘ஏ’ சான்று அளிக்கப்பட்ட திரைப்படத்துக்கு, தடையை மீறி குழந்தைகளை அழைத்து சென்ற சேலம் வளர்மதி மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியில், ஐநாக்ஸ் திரையரங்கில் புதிய திரைப்படம் வெள்ளியன்று வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்று வழங்கப்பட்டது. பொதுதளத்தில் திரைப்படத்துக்கு வரவேற்பு பெற்று உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று இந்த திரைப்படத்தை 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க கூடாது. இந்நிலையில், குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களிடம், இது ‘ஏ’ சான்று பெற்ற திரைப்படம்.

குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று திருப்பி அனுப்பினர். அப்போது, திரைப்படத்தை பார்க்க வந்த சமூக ஆர்வலரான சேலம் மாவட்டம் வீராணத்தை சேர்ந்த வளர்மதி ‘எங்கள் குழந்தைகள் என்ன திரைப்படம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்வது நாங்கள். நீங்கள் தடை செய்ய முடியாது’ என்று கூறி குழந்தைகளை திரையரங்கிற்குள் அழைத்து சென்றுள்ளார். திரையரங்கு ஊழியர்கள் எவ்வளவோ சொல்லியும் வளர்மதி கேட்காததால், திரையரங்க நிர்வாகம் சார்பில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் படி, போலீசார் திரைபடம் ஓடிக்கெண்டிருந்த போது, ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த வளர்மதியிடம் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வெளியே அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், வளர்மதி போலீசாரிடம், திரைப்படம் பார்ப்பது எங்கள் தனிப்பட்ட உரிமை, அதில் நீங்கள் தலையிட கூடாது என்றும் கூறி கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திரைப்படம் ஓடிக் கொண்டிருந்ததால், திரைப்படம் பார்க்க வந்தவர்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததனர்.

பிரச்னையை தவிர்க்க போலீசார் திரையரங்கில் இருந்து வெளியேறினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில், ‘ஏ’சான்று அளிக்கப்பட்ட திரைப்படத்தை குழந்தைகளுடன் பார்க்க அனுமதி கோரி வாக்குவாதம் செய்த சமூக ஆர்வலர் வளர்மதி மீது விருகம்பாக்கம் போலீசார், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, அத்துமீறி உள்ளே நுழைந்தது, பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வளர்மதிக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க கோரி போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

Related Stories: