அரசு, பொது நிறுவனங்கள் மின்னணு மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-23ம் ஆண்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையில், 1-04-2023 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் கொள்முதல்களுக்கும் ‘மின்னணு - கொள்முதல்முறை’ கட்டாயமாக்கப்படும். இதற்காக ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டவிதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும். புதிய ஒப்பந்த புள்ளி நடவடிக்கைகள் இனி //tntenders.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மின்னணு இணையதளமானது, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், விதிகளுக்கு இணங்க முற்றிலுமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒப்பந்தப்புள்ளி பரிவர்த்தனையையும் நாள், நேரமுத்திரையுடன் உருவாக்கி, அறிக்கையாக பதிவு செய்யப்படும்.

இதனை, அனைத்து ஒப்பந்ததாரும் பார்வையிடலாம். தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்த புள்ளிகள் சட்டப்பிரிவு 16ல் குறிப்பிடப்பட்டுள்ள கொள்முதல் வகைகள், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதி உதவி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி செய்யப்படுகின்ற கொள்முதல்கள் மற்றும் 01-04-2023ம் தேதிக்கு முன்னர் சாதாரண முறையில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளும், பல்வேறு நிலைகளில் உள்ள கொள்முதல்கள் தவிர்த்து அனைத்துக் கொள்முதல்களும் இந்த புதிய இணையதளம் வாயிலாக மட்டுமே செயல்படுத்தப்படும். இதுதவிர, 1.4.2023-க்கு பிறகு, இந்த இணையதள முறையை பின்பற்றாமல்  ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டால், அது விதிமுறைகளை மீறிய செயலாக கருதப்படும்.

Related Stories: