வள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே பாதசாரிகளுக்கான நடைபாலம் அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘‘ கடலூர் துறைமுகத்தில் இந்த  நிதியாண்டில் தனியார் முன்னெடுப்புடன் சிறு மற்றும் நடுத்தரக் கப்பல்கள்  மூலம் சரக்குகளைக் கையாள்வதற்கு தேவையான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருகிறது. கன்னியாகுமரி சிறு துறைமுகத்தில்,  விவேகானந்தர் நினைவுப் பாறையில் 100 மீட்டர் நீளத்திற்கு படகணையும், மேடை  அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், திருவள்ளுவர் சிலைப்  பாறையையும், விவேகானந்தர் நினைவு மண்டபப் பாறையையும் இணைக்கும் பாதசாரிகள்  நடை பாலத்தை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ், 100 சதவீத நிதியுதவிக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.அதேபோல,  பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் 1974ம் ஆண்டு  கலைஞரால்  தோற்றுவிக்கப்பட்டது. இந்த நிறுவனம் நம் நாட்டிலேயே மாநில அரசுக்குச்  சொந்தமான ஒரே ஒரு கப்பல் நிறுவனமாகும். இந்நிறுவனம், மூன்று அனல்மின்  நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை பாரதீப், தாம்ரா ஆகிய இரண்டு  துறைமுகங்களிலிருந்து, நிலக்கரியை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்குக்  கொண்டு வந்து சேர்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

இந்த  நிறுவனத்தினால், கன்னியாகுமரி படகுத் துறையிலிருந்து, விவேகானந்தர்  நினைவுப்பாறை, திருவள்ளுவர் சிலைக்குப் பயணிகளை ஏற்றி செல்வதற்காக  தலா 150  இருக்கைகள் கொண்ட எம்.எல்.குகன்,  எம்.எல்.பொதிகை, எம்.எல்.விவேகானந்தா  ஆகிய மூன்று படகுகள் 1984ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. நஷ்டத்தில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் 2022-23ம் ஆண்டில், ரூ.2 கோடி  லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: