அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா ரகசிய பேச்சு: அண்ணாமலை, ஓபிஎஸ் நிலை என்ன? தொண்டர்கள் குழப்பம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியுடன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அண்ணாமலை, ஒ.பன்னீர்செல்வத்தின் நிலை என்ன? அவர்களின் அரசியல் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதிமுக தற்போது 4 அணிகளாக பிரிந்து நிற்கிறது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்தான் அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என்று நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். அதில் தற்காலிகமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதனால் உடனடியாக கட்சியில் தேர்தல் நடத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் போனில் வாழ்த்து கூறினர். சிலர் நேரிலும் வாழ்த்து தெரிவித்தனர். அதேநேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு முன்னர், தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மேலிடத்தை மிரட்டும் வகையில் அண்ணாமலை பேசினார். இதனால் டெல்லிக்கு அழைத்துப் பேசிய அமித்ஷா, அவருக்கு டோஸ் விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் சென்னை திரும்பிய அண்ணாமலை கூட்டணி குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் என்று கூறி வருகிறார். ஆனால் தமிழக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைவர் என்று கூறாமல் உள்ளார்.

இந்தநிலையில், டெல்லியில் பேட்டியளித்த அமித்ஷா, தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை தாங்கும். பாஜ கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடும் என்று அறிவித்தார். அதாவது அண்ணாமலையின் கருத்துக்கு நேர் எதிரான கருத்தை அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை போனில் தொடர்பு கொண்ட அமித்ஷா, பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். அதோடு அதிமுகவில் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும். அதுவரை தான் பேசியது குறித்து எந்த தகவலையும் வெளியில் பகிர வேண்டாம் என்று அவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு காரணம், பாஜவை நம்பித்தான் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை எதிர்த்து தனி அணி தொடங்கினார். அப்போது முதல் பாஜவுடன் நெருக்கமாக உள்ளார்.

இதனால் அவரையும் இப்போது பகைத்துக் கொள்ள வேண்டும். விரைவில் அதிமுக பிரச்னை முடிவுக்கு வரும் என்று அமித்ஷா கருதுவதால்தான், வெளியில் கூற வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை, அமித்ஷா தொடர்பு கொண்டு பேசிய தகவல் வெளியானதால், அண்ணாமலையும், ஓ.பன்னீர்செல்வமும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக அண்ணாமலை மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் நிலைதான் திரிசங்கு போல உள்ளது. ஆனால் அவர் சட்டப்போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்களும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

Related Stories: