காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்: அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார். அப்போது அவர் பேசியதாவது:காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் சிறப்புமிக்க திட்டமாகும். சொல்லப்போனால், தமிழ்நாட்டில் காமராஜர் முதல்வராக இருந்த காலத்திலிருந்து அனைத்து முதல்வரும் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கனவு கண்ட திட்டம். இந்த திட்டத்தினை அனைவரும் நிறைவேற்ற வேண்டுமென்று எண்ணிய திண்ணிய திட்டம்.

அன்றைக்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி,இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தினை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும். எனவே அமைச்சர்  இதனை நேரடியாக சென்று ஆய்வு செய்து, இத்திட்டத்திற்கான சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்.தற்போதைய நீர் வளத் துறையின் அமைச்சராக மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளார். அவர் கூறியது போன்று நீர் வளத் துறையில் நீண்டகாலம் நீர் வளத் துறையை நிர்வகித்தவர்.

இந்த காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை அவர் நிறைவேற்ற வேண்டும். மேட்டூரில் திறந்துவிட்டு கடலில் வீணாக கலக்கின்ற நீரையெல்லாம் பார்த்தால் எங்களுக்கு கொஞ்சம் ஏக்கமாக இருக்கும். அந்த ஏக்கத்தை போக்க வேண்டும். விவசாயிகளினுடைய கண்ணீரை துடைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: