பல்லாவரத்தில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வாக பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்களை மாற்ற வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி பேசுகையில், ‘‘திமுக ஆட்சியில் 1998ம் ஆண்டு பல்லாவரம் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, மறைந்த முதல்வர் தலைவர் கலைஞர் ரூ.36.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் பிறகு, 2004-2005ம் ஆண்டில் அந்தப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது பதிக்கப்பட்ட, அதாவது, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட அந்தக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி, ஒவ்வொரு மழைக் காலத்திலும் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, தலைமைச் செயலாளருக்கும்,  அரசிற்கும் அனுப்பப்பட்டுள்ளது. அம்ரூத் திட்டத்தின்கீழ் அதை செயல்படுத்த 90 கோடி ரூபாய் தேவை என்று மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் எதிர்காலத்தில் பிரச்னை வராது.

எனவே, அதற்கு அமைச்சர்  ஆவன செய்ய வேண்டும்,’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘பல்லாவரம் பகுதியில் பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்களை மாற்றுவதற்கு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு, அந்தப் பணி அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. விரைவில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணிகள் முடிக்கப்படும். மேலும், இப்போது 150 எம்எல்டி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அந்தத் தண்ணீர் வருகிற போது, இசிஆர் சாலையைத் தொடர்ந்து, அங்கிருந்து பல்லாவரம், தாம்பரம் வரை குடிநீர் கொடுக்கிற பணி இருக்கிறது. எனவே, புதிய குழாய்களும் பதிக்க இருக்கிறோம். ஆகவே,  உறுப்பினரின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: