புகுஷிமா அணுமின் நிலைய விபத்து பகுதிகளில் மக்கள் வசிக்க அனுமதி: 12 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை

டோக்கியோ: புகுஷிமா அணுமின் நிலைய விபத்து நடந்த இடத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் ஒரு சில பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு பயங்கர  நிலநடுக்கம்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.‌மேலும் புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலையில் உள்ள ஜெனரேட்டர்கள் சேதம் அடைந்தன. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் அணு கதிர்வீச்சு தாக்கியது.

மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு அணு உலையில் இருந்து  கதிர் வீச்சின் தாக்கம்  அதிகமாக இருந்தது. 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். விபத்து நடந்து 12 ஆண்டுகளுக்கு பின்,டோமியோகா நகரின் ஒரு சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு மக்கள் மீண்டும் குடியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த விழாவில் பிரதமர் புமியோ கிஷிடா  கலந்துகொண்டு பேசும்போது,‘‘ குடியிருப்பு பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளது சாதாரண விஷயம் இல்லை. அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை விலக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.  

அணு உலை விபத்தின் போது வெளியேற்றப்பட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேரில் இதுவரை 30 ஆயிரம் பேர் மீண்டும் அங்கு குடியேறியுள்ளனர்.

Related Stories: