கட்சித்தாவல் தடை சட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க முடியுமா?: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் விளக்கம்

புதுடெல்லி: கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க ஒன்றிய அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,’ ஒரு எம்பி அல்லது எம்எல்ஏ சட்டவிதி எண் 191(1)(இ) பிரிவின் 10வது விதிமுறைப்படி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அந்த தொகுதியில், 5 ஆண்டுகளுக்குள் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 362(அ) பிரிவின் கீழ் அவர்கள் இடைத்தேர்தலில் அதே தொகுதியில் மனுத்தாக்கல் செய்தால் அதை நிராகரிக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,’  கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் அதே தொகுதியில் 5 ஆண்டுகளுக்குள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்தப் பங்கும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளது.

Related Stories: