தமிழகத்தில் சுங்கச்சாவடி எடுக்கப்பட வேண்டும் என்பது அரசின் விருப்பம்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சுங்கச்சாவடி எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பமாக உள்ளது. பராமரிப்பு பணிகளுக்கு கூட 40 சதவீதம் குறைவாக தான் வசூல் செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து வேல்முருகன்(தவாக), கே.பி.அன்பழகனின்(அதிமுக) கேள்விக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாட்டில் 6,805 கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 5, 128 கிலோமீட்டர் தொலைவு சாலையும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 677 கிலோ மீட்டர் தொலைவும் பராமரிக்கப்படுகிறது.

மொத்தமாக 58 சுங்கச்சாவடிகள் இதில் வசூல் செய்கிறது. இவற்றில் 37 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதலும், மீதமுள்ள 27 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் முதலும் கட்டண உயர்வை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் உடைய உத்தரவுப்படி, கடந்த மார்ச் 18ஆம் தேதி ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் பல  சுங்கச்சாவடியில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும் என கேட்டுள்ளோம். மாநில அரசு போடக்கூடிய சாலையில் இருபுறமும் ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு சாலை போட்டுவிட்டு டோல்கேட் வசூலிக்கின்றது ஒன்றிய அரசு. 7 மீட்டர் அகலம் உள்ள சாலையில் இருபுறமும் ஒன்றரை மீட்டர் கூடுதலாக சாலை போட்டு கொடுத்து அதில் டோல்கேட் வைத்துக் கொள்கின்றது ஒன்றிய அரசு.

இதுபோன்று 14 சாலைகளில் டோல்கேட் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்து வருகின்றது. ஒன்றிய அரசு தரப்பில் இருந்து திரும்பத் திரும்ப சொல்லக்கூடிய ஒரே பதில், சட்டப்படி போடப்பட்ட ஒப்பந்தத்தின் படியே கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது என தெரிவிக்கின்றனர். அதேபோல இனிமேல் சுங்க கட்டணம் என்பது செயலி அடிப்படையில், பயணிக்கும் தொலைவிற்கு வசூல் செய்யப்படும் என்றும் ஒரு கருத்தை ஒன்றிய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை சுங்கக்கட்டணம் முழுமையாக எடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் பராமரிப்பு செலவிற்கு கூட 40 சதவீதத்திற்கும் குறைவாகவே வசூல் செய்ய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: