திருப்பதியில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையம் திறப்பு ஆண்டுக்கு ₹5 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு

*ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு சப்ளை

*அறங்காவலர் குழு தலைவர்  தகவல்

திருமலை : திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆயுர்வேத மருந்தகத்தில், புதிய ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையத்தை திறந்து வைத்த அறங்காவலர் குழு தலைவர், ஆண்டுதோறும் ₹5 கோடி மதிப்பில் ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்யவும், ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதி அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. இங்கு புதிதாக கட்டியுள்ள ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு மையத்தை அறங்காவலர் குழு தலைவர் சுப்பா, செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

முன்னதாக, அர்ச்சகர்கள்  பூஜை செய்ததும் புதிய கட்டிடம் மற்றும் மருந்து தயாரிப்பு பணியை அறங்காவலர் குழு தலைவர் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நமது முன்னோர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட பழமையான ஆயுர்வேத மருத்துவத்தை மேம்படுத்த தேவஸ்தானம் முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 1983ம் ஆண்டு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியும், அதனுடன் இணைந்த ஆயுர்வேத மருத்துவமனையும் நிறுவப்பட்டது. ஆயுர்வேத மருத்துவமனை நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து, தற்போது மாநிலம் முழுவதிலும் இருந்து இங்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கி வருகிறது. நரசிங்கபுரத்தில் 1990ம் ஆண்டு 14.75 ஏக்கரில் ஆயுர்வேத மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளை சுயமாக தயாரிக்க தொடங்கியது.

ஆரம்பத்தில் 10 வகையான மருந்துகளை மட்டுமே தயாரித்து வந்தது. பின்னர், படிப்படியாக அதன் எண்ணிக்கை 80ஆக உயர்ந்தது. இங்கு தயாரிக்கும் மருந்துகளை ஆயுர்வேத மருத்துவமனை மட்டுமின்றி திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள மருந்தகங்களுக்கு சப்ளை செய்து வருகிறது. மருந்தகத்தை மேலும் மேம்படுத்தி ஆயுர்வேத மருத்துவத்தை மக்கள் அணுகக்கூடியதாக மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்தது.இதற்காக, மருந்தக கட்டிடங்களை நவீனமயமாக்குவதுடன் ₹3.90 கோடி மதிப்பில் 3 மருந்து தயாரிப்பு மையங்கள் கட்டப்பட்டு அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதில், முதற்கட்டமாக மருந்து தயாரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆண்டுக்கு ₹1.5 கோடி மதிப்பிலான மருந்துகளை தயாரிக்கும் இந்த மருந்தகத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து, ஆண்டுக்கு ₹5 கோடி மதிப்பிலான மருந்துகளை உற்பத்தி செய்யும் அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளை தேவஸ்தான மருந்தக தேவைகளுக்கு மட்டுமின்றி, ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்ய மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 தேவஸ்தான விற்பனை நிலையங்களில் சில தனித்துவமான மற்றும் பிரபலமான மருந்துகளை பொதுமக்களுக்கு கிடைக்க செய்ய முயற்சி செய்து வருகிறோம். இன்று திறக்கப்பட்ட மருந்து தயாரிப்பு மையத்தில் முதற்கட்டமாக 10 வகையான மருந்துகள் தயாரிக்கப்படும்.  எதிர்காலத்தில் 314 வகையான புதிய மருந்துகளை தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், இணை செயல் அதிகாரி சதா பார்கவி, தலைமை பொறியாளர் நாகேஸ்வர ராவ், ஆயுர்வேத மருத்துவமனை கண்காணிப்பாளர் ரேணு தீட்சித், ஆயுர்வேத கல்லூரி முதல்வர் முரளி கிருஷ்ணா, துணை முதல்வர் சுந்தரம், இஇ.முரளிகிருஷ்ணா, விஜிஓ மனோகர், ஆயுர்வேத மருந்தக தொழில்நுட்ப அலுவலர் நாரப்ப  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: