மூணாறில் சின்னக்கானல், சாந்தன் பாறை, ஆணையிரங்கல், பூப்பாறை பகுதிகளில் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்

*வீடுகள், கடைகள், வாகனங்களை தாக்கி அட்டூழியம்

*யானைகளை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

மூணாறு : மூணாறு பகுதிகளில் அரிசி கொம்பன், படையப்பா உள்ளிட்ட காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார், கடைகளை அடித்து நொறுக்கி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மூணாறு முற்றிலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு இடம் ஆகும்.இங்கு முக்கிய தொழில் தேயிலை விவசாயம் .இதனால் மூணாறு எந்த காலநிலையில் பச்சை போர்வை போர்த்திய போல் காட்சி அளிக்கும் இடம் ஆகும்.

இந்த தேயிலை விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.தொழிலாளர்களின் குடியிருப்புகள் நிலை கொள்வது வனத்தோடு சேர்ந்த பகுதிகளில் ஆகும்.மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.முன் காலங்களில் காட்டு யானைகள் சுற்றித்திரிந்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து தொந்தரவு செய்வதில்லை.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது தொழிலாளர்களின் விவசாய நிலங்கள்,குடியிருப்புகள்,வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்களின் உயிருக்கும் சொத்திற்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.சாந்தன்பாறை, சின்னக்கானல், மூணாறு, தேவிகுளம் ஆகிய பஞ்சாயத்துகளில் சுற்றித்திரியும் 5 காட்டு கொம்பன் யானைகள் தான் அதிக தாக்குதல் குணம் உடையவை. படையப்பா, அரிசி கொம்பன்,கணேசன்,முறிவாலன்,ஓஸ் கொம்பன் என்ற பெயர்களில் இந்த காட்டு கொம்பன் யானைகள் அழைக்கப்படுகின்றன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே 301 காலனி மற்றும் சிங்கு கண்டம் உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் சின்னக்கானலில் யானைகளின் தாக்குதல் காரணமாக பல குடும்பங்கள் வெளியேறிவிட்டன. 301 காலனியிலும் 200 குடும்பங்கள் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டனர்.

அதுபோல், விலக்கு காலனியில் இருந்து 140, பந்தடிகுளத்தில் இருந்து 30, என்பதேக்கர் காலனியில் இருந்து 8 குடும்பங்களும் சொந்த வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது இப்பகுதியில் வசிப்பவர்கள் பிழைப்புக்கு வேறு வழி இல்லை என்பதாலும் இங்கு வசிப்பதாக கூறுகின்றனர். 2017ம் ஆண்டு முதல் சின்னக்கானல், சாந்தன்பாறை பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளது அரிசி கொம்பன் என்று அழைக்கப்படும் காட்டு யானை, கடந்த 6 வருடங்களில் 108 வீடுகள், 20 ரேஷன் கடைகள் மற்றும் 7 பேரை கொன்றுள்ளது.

இந்த அரிசி கொம்பன் காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் உள்ள தோண்டிமலை, சுண்டல், பண்ணையார் எஸ்டேட், தலக்குளம், பியல்ராவ், யானையிறங்கல், மூலத்துறை, கோரம்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இடுக்கி மாவட்டத்தில் 13 பஞ்சாயத்துகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், போடிமெட்டு அருகே கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்பகுதியில் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பேராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அதுபோல், மூணாறு பகுதியில் படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலமானது. மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக உலா வருகிறது. குறிப்பாக மாட்டுப்பட்டி, எக்கோ பாயின்ட், பாலாறு உள்ளிட்ட இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை வழக்கமாக வைத்துள்ளது. அடிக்கடி சாலையில் இறங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை விரட்டி ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது.

மேலும் சின்னக்கானல், சாந்தன் பாறை, ஆணையிரங்கள், பூப்பாறை போன்ற பகுதிகளில் அரிசி கொம்பன், கணேசன், முறிவாலன் என்ற பெயரில் அழைக்கப்படும் காட்டு யானைகள் நிரந்தரம் தொழிலாளர்களுக்கு பிரச்சனையாக மாறியுள்ளன.இப்பகுதியில் பகல் நேரங்களில் சுற்றித்திரியும் யானைகளால் ஏலத்தோட்டத்திற்கு ஆட்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பல தோட்டங்களும் அடைத்து பூட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கோரி, மக்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், நிலைமை மாறாமல் தொடர்ந்து வருகிறது.கடந்த 20வருட கால அளவில் மூணாறு மற்றும் சின்னக்கானல் போன்ற தோட்ட பகுதிகளில் யானை தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.ஆனால் வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு மற்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தனியாக சுற்றித்திரியும் இந்த காட்டு யானைகள் பொதுமக்களுக்கு ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளன. மக்கள் வசிக்கும் பகுதியை விட்டு வெளியேறாமல் சுற்றித்திரியும் இந்த கொம்பன் யானைகள் சுற்றுலாத் துறைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.இந்த பிரச்னைக்குரிய 5 கொம்பன் யானைகளை பிடித்து வயநாடு, திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே உள்ளூர்வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: