பட்டாசு அணுகுண்டை வெடிக்க வைத்த நான்கு பேர் கைது: மதுரவாயலில் பரபரப்பு

பூந்தமல்லி: மதுரவாயலில் பட்டாசு அணுகுண்டை சேர்த்து வெடிக்க வைத்த நான்கு பேரை போலீசார் கைது  செய்து விசாரிக்கின்றனர். மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் நேற்று பலத்த வெடிச்சத்தம் அப்பகுதியினருக்கு கேட்டது. நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டதால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.  அதில் மதுரவாயல் கங்கை அம்மன் நகரைச் சேர்ந்த அசோக்குமார்(29), என்பவர் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசு அனுகுண்டுகள் சிலவற்றை ஒன்றாக சேர்த்து வைத்து பலத்த சத்தத்துடன் வெடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அசோக்குமார்(29), அவரது நண்பர்கள் சுரேஷ்குமார்(38), இளங்கோவன்(21), விஜய்(23), ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தீபாவளிக்கு வாங்கி வைத்த பட்டாசுகளை வெடித்தார்களா? அல்லது நாட்டு வெடிகுண்டை வெடிக்க வைத்தனரா? சதி திட்டம் தீட்டவும், அந்த பகுதி மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார்  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: