விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த ஆத்திரம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக புகார் செய்த மனைவிக்கு சரமாரி அடி-உதை: கணவரிடம் போலீசார் விசாரணை

திருவள்ளூர்:  திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (32). இவருக்கும் பிரவீன்குமார் (34) என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டில் திருமணம் நடந்தது. பிரவீன்குமார், தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அலமேலு, அரசு நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வருவதாகவும், பட்டப்படிப்பு படித்திருப்பதாகவும் கூறி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் அலமேலு, 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதும் தற்காலிக ஊழியராகத்தான் திருவள்ளூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வேலை செய்து வருவதும் பிரவீன்குமாருக்கு தெரியவந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரவீன்குமார் 2022ம் ஆண்டு திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக திருவள்ளூர் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 24ம் தேதி கணவர் பிரவீன்குமார் மற்றும் மாமியார் ஜெயந்தி மீதும் அலமேலு வழக்கு தாக்கல் செய்தார். இதையறிந்த பிரவீன்குமார், தனது வீட்டின் மாடி பகுதியில் வசித்து வரும் அலமேலு வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசியும், கம்பால் அடித்தும் மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அலமேலு திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: