குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் சிந்தாதிரிப்பேட்டையில் இன்று முதல் செயல்படும்: வாரியம் தகவல்

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம் இன்று முதல் சிந்தாதிரிப்பேட்டையில் புனரமைக்கப்பட்டுள்ள அலுவலக கட்டடத்தில் முழுமையாக செயல்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரக அலுவலக கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், முதலமைச்சரால் கடந்த 13ம் தேதி புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

அனைத்து பணிகளும் தற்போது முடிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் 3ம் தேதி முதல் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம்,  சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டடத்தில் முழுமையாக செயல்படும். எனவே, பொதுமக்கள், நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்கள், புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு போன்ற விவரங்களைப் பெறுவதற்கு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.  கூடுதல் விவரங்களை, 24 மணி நேரமும் செயல்படும் தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை 044-45674567 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: