கட்டிய பணத்தை திரும்ப தராததால் ஏலச்சீட்டு நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன் தீக்குளிப்பு: தடுத்த பெண் ஊழியரும் காயம்

* எம்ஜிஆர் நகரில் பரபரப்பு

சென்னை: கட்டிய பணத்தை திரும்ப தராததால் ஏலச்சீட்டு நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்ற முயன்ற பெண் ஊழியர் மீதும் தீப்பிடித்ததால் எம்ஜிஆர் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் அண்ணா முதன்மை சாலையில் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில், ராமாபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவர் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு செலுத்தி வருகின்றனர். அதன்படி, கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பையா (56) என்பவர், செல்வம் நடத்தும் ஏலச்சீட்டு நிறுவனத்தில் ரூ.1 லட்சத்திற்கான ஏலச்சீட்டில், மாதம் ரூ.3,350 வீதம் கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், ேபாதிய வருவாய் இல்லாத காரணத்தால், 30 மாதங்கள் கட்ட வேண்டிய ஏலச்சீட்டை 15 மாதங்கள் மட்டுமே கட்டியுள்ளார். மீதமுள்ள மாதங்களில் தன்னால் ஏலச்சீட்டு கட்ட முடியாது என்றும், இதுவரை கட்டிய பணத்தை மட்டும் தன்னிடம் கொடுத்துவிடுங்கள் என்றும் ஏலச்சீட்டு நிறுவனத்தில் சுப்பையா தெரிவித்துள்ளார்.  அதற்கு அவர்கள், 30 மாதம் வரை முழுமையாக தவணையை செலுத்த வேண்டும் என்றும், திடீரென பாதியில் பணத்தை கேட்டால் எப்படி தரமுடியும் என்றும் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த சுப்பையா, நேற்று முன்தினம் இரவு ஏலச்சீட்டு நிறுவனத்திற்கு சென்று, தனக்கு சேரவேண்டிய பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், எங்களால் இப்போது பணம் தரமுடியாது என கூறியதாக தெரிகிறது.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில் சுப்பையா, பையில் எடுத்து வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் வாலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஏலச்சீட்ட நிறுவன ஊழியர் காயத்ரி, சுப்பையாவை காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் தீ பரவியது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு சாலையில் சென்ற பொதுமக்கள் ஓடிவந்து, தீயை அணைத்து இருவரையும் மீட்டனர்.

தகவலறிந்த எம்ஜிஆர் நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தீக்காயமடைந்த சுப்பையாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், காயமடைந்த காயத்ரியை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சுப்பையா உடலில் 60 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருப்பதால் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் எம்ஜிஆர் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: