வளசரவாக்கத்தில் தரமற்ற முறையில் அமைத்த சாலையை அகற்றிவிட்டு மீண்டும் புதிய சாலை அமைக்க வேண்டும்: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

* ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி உத்தரவு சோதனையில் சிக்கியதால் நடவடிக்கை

சென்னை: வளசரவாக்கத்தில் தரமற்ற முறையில் அமைத்த சாலையை அகற்றிவிட்டு, மீண்டும் புதிய சாலை அமைக்க வேண்டும் என  ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரால் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும்,  மாநகராட்சி மேயர் ஆலோசனையின்படியும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புர சாலை உட்கட்டமைப்பு நிதி மற்றும் சேமிப்பு நிதி, சிங்கார சென்னை 2.0 ஆகிய திட்டங்களின் கீழ் புதிதாக சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சாலை அமைக்கும் பணிகளை கண்காணிக்க ஆணையாளர்  தலைமையில், இணை ஆணையாளர் (பணிகள்), வட்டார துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், இரவில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கப்படும் இடங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டுக்குட்பட்ட மாருதி நகர், முதல் பிரதான சாலையில், கடந்த மாதம் 11ம் தேதி சாலை அமைக்கும் பணிக்காக பழைய சாலை முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. பின்னர், கடந்த மாதம் 29ம் தேதி இரவு 10 மணியளவில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 30ம் தேதி அதிகாலை 12.45 மணியளவில் 2 லாரிகளில் தார்க்கலவைகள் சாலை அமைக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. அப்போது, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவிப்  பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, தார்க்கலவையின் வெப்பநிலையை  சரிபார்த்த போது, 140 டிகிரி செல்சியஸ் முதல் 160 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டிய தார்க்கலவையின் வெப்பநிலை 115 டிகிரி செல்சியஸ் அளவில் மட்டுமே இருந்தது.

கலவையின் வெப்பநிலை தளத்திலிருந்து வாகனங்களில் ஏற்றும்போது 160 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்தததாக திட்ட கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அவர்கள் இரவு 1 மணியளவில் இந்த சாலை பணிகளை கண்காணிக்க வந்து, தார்க்கலவையின் வெப்பநிலையை பரிசோதனை செய்தபோது, 105 டிகிரி செல்சியஸ், 110 டிகிரி செல்சியஸ், 94 டிகிரி செல்சியஸ் என தார்க்கலவையில் வேறுபாடு காணப்பட்டது.

எனவே, இந்த தார்க்கலவை சாலை அமைப்பதற்கு ஏற்ற தரத்தில் இல்லை என தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆய்வில் தெரியவந்து. எனவே, 2 லாரியில் இருந்த தார்க்கலவை திரும்ப அனுப்பப்பட்டன. மேலும், புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் புதிய தார்சாலை அமைக்க ஒப்பந்ததாரருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  மேலும, இனிவரும் காலங்களில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப்பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள்  வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என உத்தரவிட்டனர்.

* சாலைப்பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் இடையூறாக வாகனம் மற்றும் பிற தடைகள் ஏதேனும் இருந்தால் அந்த இடையூறுகளை சரிசெய்வது தொடர்பாக களஆய்வு மேற்கொண்டு சரிசெய்திட வேண்டும்.

* சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது உரிய தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும்.

* சாலைப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக இயந்திரங்களைக் கொண்டு சரியாக சுத்தம் செய்யப்பட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* சாலைப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக ஏற்கனவே இருந்த சாலையினை தேவையான அளவிற்கு அகழ்ந்தெடுத்திட வேண்டும். அதன் மட்டம் மழைநீர் சரியாக வடிகாலில் செல்லும்படி அமைக்க வேண்டும்.

* அகழ்தெடுக்கப்பட்ட சாலையின் ஆழத்தையும் அமைக்கப்பட்ட சாலையின் உயரத்தையும் சரி பார்த்திட வேண்டும்.

* அகழ்ந்தெடுக்கப்பட்ட சாலையின் கழிவு மற்றும் இதர பொருட்கள் அகற்றப்பட்டு அதனை உறுதி செய்திட வேண்டும்.

* தார்க்கலவையின் தரம் மற்றும் அதன் பேக்கிங் தேதி சரிபார்க்கப்பட வேண்டும்.

* தார்க்கலவை ஒரே சீராக கலந்து உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* சுண்ணாம்புத்தூள் மூலம் அமைக்கப்படும் தார்சாலையின் அகலம் சரியாக குறிக்கப்பட்டு, அதன்படி தார்ச்சாலையை சீரான அகலத்தில் அமைத்து அதனை சரிபார்த்திட வேண்டும்.

* சாலையில் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்ப விவரங்களுடன் கூடிய அட்டவணை விவரத்தினை நிரப்ப வேண்டும்.

* கலவையின் வெப்பநிலை (140 செல்சியஸ் - 160 செல்சியஸ்) வாகனத்திலும், தளத்திலும் சாலையில் பயன்படுத்தும் போதும் சரிபார்க்கப்பட வேண்டும்.

* தார்க்கலவையில் உள்ள ஒட்டும் தன்மையினை சாலை அமைக்கும் போது சரிபார்க்கப்பட வேண்டும்.

* தார்ச்சாலை அமைக்கும் போது கலவை பரப்பும் போது அதன் தடிமன் அளவினை சரிபார்க்க வேண்டும்.

* தார்ச்சாலை அமைக்கும் போது உருளை இயந்திரம் 2 எண்களும், ஒரு பொக்லைன் இயந்திரமும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* தார்ச்சாலை அமைத்து அதன்மேல் அழுத்தம் தரும் இயந்திரத்தின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 5. கி.மீ. என்கிற அளவில் இருக்க வேண்டும்.

* தார்க்கலவையின் வெப்பம் 90 டிகிரி செல்சியஸ் ஆவதற்கு முன்பாக தார்ச்சாலையில் பரப்பி முழுமையாக கெட்டிப்படுத்தப்பட வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: