ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அகமதாபாத்: பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த தகவல்களை தருமாறு 7 ஆண்டுக்கு முந்தைய ஒன்றிய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய குஜராத் உயர் நீதிமன்றம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி

உள்ளது.

பிரதமர் மோடி 1978ம் ஆண்டு அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றதாகவும், 1983ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரது கல்வித் தகுதி குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதற்கிடையே, சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் 1978 மற்றும் 1983ம் ஆண்டு படித்த மாணவர்களின் விவரங்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்தார். கடந்த 2016ல் அப்போதைய ஒன்றிய தகவல் ஆணைய தலைவர் தர் ஆச்சார்யலு, பிரதமர் மோடி பெற்ற பட்டங்கள் குறித்த தகவல்களை கெஜ்ரிவாலுக்கு வழங்குமாறு டெல்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்

பட்டது.

விசாரணையில், பிரதமரின் பட்டங்கள் குறித்த தகவல் பொது வெளியில் இருப்பதாகவும், பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக ஒரு விஷயம் பொது நலன் ஆகிவிடாது என்றும், பல்கலைக்கழகம் தனது மாணவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட மறுக்கலாம் என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் வாதாடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பைரேன் வைஷ்ணவ் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ‘‘ஒன்றிய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்த மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை 4 வாரத்தில் குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் அவர் டெபாசிட் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.  இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

* படிக்காத பிரதமர் மிகவும் ஆபத்தானவர் குஜராத் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் எவ்வளவு படித்துள்ளார் என்பதை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? கல்விச் சான்றிதழை காட்டுவதற்கு நீதிமன்றத்தில் அவர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஏன்? அவரது கல்வி சான்றிதழை பார்க்க விரும்புபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? என்ன நடக்கிறது? படிக்காத அல்லது குறைவாக படித்த பிரதமர் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர்’ என பதிவிட்டுள்ளார்.

* நீதித்துறையை விமர்சிப்பாரா? பாஜ செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனவல்லா தனது டிவிட்டர் பதிவில், ‘பொய் சொல்வதும், அருவருப்பு கருத்துக்களை கூறுவதும், பிரதமருக்கு எதிராக பொய் பேசுவதும் பேஷனாகிவிட்டது. இந்த விஷயத்தில் ராகுலுக்கு கடும் போட்டியாக கெஜ்ரிவால் இருக்கிறார். ஆனால் இன்று அவருக்கு உயர்நீதிமன்றம் சரியான பாடம் கற்பித்துள்ளது. ராகுலைப் போல கெஜ்ரிவால் நீதித்துறை பற்றி தவறான கருத்துக்களை வெளியிடமாட்டார் என்று நம்புகிறேன்! அப்படி செய்தால் அவரை படிப்பறிவில்லாதவர் என நினைக்கக் கூடும்’ என கூறி உள்ளார்.

Related Stories: